நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு!

Published On:

| By Selvam

சென்னை தாம்பரத்தில் ரூ.3.99 கோடி ரூபாய் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புளூ டைமண்ட் ஹோட்டலில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 7) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.3.99 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்று பேரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர், நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணம் எடுத்துச்செல்லப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் உறவினரான முருகன் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். தற்போது சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது என்று ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சம்மர் ஹாலிடேஸ்: சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் 4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share