ரெய்டில் சிக்கிய நயினார்: 4 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்கும் ஐடி!

Published On:

| By Selvam

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு இன்று (ஏப்ரல் 7) தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலை பார்த்த நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் முருகன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, “தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுதொடர்பான விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். அந்தவகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இதுதொடர்பான அனைத்து விவரங்களும் வருமான வருத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அழைக்கும் ராகுல்… யோசிக்கும் ஸ்டாலின்… எங்கே, ஏன்?

நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel