திருப்பதி லட்டு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறியாதவர் இல்லை. எத்தனையோ வகை வகையாக லட்டுகள் இருந்தாலும், திருப்பதி கோயில் கூட்டத்தில் முண்டியடித்து வாங்கும் அந்த லட்டுவின் சுவை அலாதியானது.
அதுவும் இப்போது புரட்டாசி மாதத்தை ஒட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் எக்கச்சக்கமாகத் திரண்டிருக்கிற நிலையில், லட்டுகளின் தேவையும் அதிகமாகியிருக்கிறது.
வருடத்தின் மற்ற மாதங்களில் அசைவ உணவு பழக்கம் கொண்ட பக்தர்கள் புரட்டாசி விரதமிருக்கும் வழக்கம் உண்டு, சைவ உணவு மட்டுமே உட்கொண்டு, திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசிக்கும் அவர்களுக்கு…
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மூரில் இது ஆன்மீகம், பக்தி விஷயம். ஆனால் ஆந்திராவில் இந்த லட்டு விவகாரம் பக்கா அரசியல் மோதலாகவும் வெடித்திருக்கிறது.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது.
இதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உடனடியாக ஆந்திராவின் இந்து அமைப்புகள் ஜெகன் மோகன் ரெட்டி ஒட்டுமொத்த இந்துக்களையும் அவமதித்துவிட்டார் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை வைத்தார்.
ஏற்கனவே அரசியல் ரீதியாக பெரும் சரிவைச் சந்தித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி லட்டு விவகாரத்தில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
இந்நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்து,
“எனது ஆட்சிக் காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. 6 மாதத்துக்கு ஒருமுறை நெய் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவது வழக்கமான நடைமுறை. இதில் எங்கள் ஆட்சியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 15 முறையும், எனது ஆட்சியில் 18 முறையும் தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே நெய் கொள்முதல் செய்யப்படும். ஒவ்வொரு நெய் டின்களும் 3 கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மாதிரி பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும்.
ஒரு முதலமைச்சர் கோயில் பிரசாதத்தில் மாமிச கொழுப்பு கலந்திருப்பதாக சொல்வது நியாயமா? பக்தர்களின் உணர்வுகளில் விளையாடுவது சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறியது குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அதேசமயம் லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றசாட்டு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா கேட்டுள்ளார்.
திருப்பதி லட்டு 300 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கது. 1715 ஆம் ஆண்டு முதல் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம், ‘போட்டு’ என்ற சிறப்பு சமையலறையில் தயாரிக்கப்படுகிறது. அங்கு பாரம்பரிய சமூகத்தைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் தலைமுறை தலைமுறையாக லட்டு தயாரிக்கிறார்கள்.
திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, திருப்பதிக்கு வரும் கூட்டம் அதிகரித்த நிலையில் லட்டு உற்பத்தியில் பல்வேறு அணுகுமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது லட்சக்கணக்கான லட்டுகள் செய்ய வேண்டும் என்ற நிலையில் பாரம்பரியமான தயாரிப்பு முறைகளுக்கு அப்பாற்பட்டும் லட்டு தயாரிக்கும் கூடங்கள் நிறுவப்பட்டன. 2014 ஆம் ஆண்டில், திருப்பதி லட்டு புவிசார் குறியீடு (ஜிஐ) அந்தஸ்தைப் பெற்றது.
லட்டு தயாரிப்பதற்கு கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், அரிசி ஆகியவை பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான மூலப்பொருள் நெய்.
இந்த நெய் கொள்முதலில்தான் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு மாதிரிகள் அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் லட்டுவில் சோயா, சூரியகாந்தி, ஆலிவ், மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதாவது ‘எஸ்’ என்ற மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் கொழுப்பு இருந்தால் அது வெளிப்புற கொழுப்பு என்று சொல்லப்படுகிறது. எஸ்-இன் மதிப்பானது 95.68 முதல் 104.32-க்குள் இருக்க வேண்டும். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரி 20.32 முதல் 116.09 வரையிலான மதிப்புகளைக் காட்டியிருக்கிறது.
இதன்மூலம் லட்டுவில் மாமிச கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் இதுகுறித்து கூறுகையில், “நெய்யை ஆய்வு செய்ய எங்களிடம் லேப் இல்லை. இதை பயன்படுத்தி எங்களுக்கு தரமற்ற நெய்யை வழங்கியுள்ளனர்.
ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நெய்யின் மாதிரிகளைச் சோதனை செய்ததில் அவர்கள் தரமற்ற நெய் விநியோகம் செய்தது தெரியவந்தது. மாட்டுக் கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்து எச்சரித்தோம். அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “கலப்படம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு கிலோ பசு நெய் 320 ரூபாய்க்கு வழங்கப்படுவது தெரிந்தது. தரமான பசு நெய்யை எப்படி இவ்வளவு குறைந்த விலையில் வழங்க முடியும்? கலப்படம் செய்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்” என்றும் கூறினார்.
ஆனால் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டைரி புட்ஸ் நிறுவன அதிகாரிகள் இதை திட்டவட்டமாக மறுத்தனர். 25 ஆண்டுகளாக நாங்கள் இந்த துறையில் இருக்கிறோம். எல்லா இடத்திலும் எங்களது பொருட்கள் உள்ளது. வேண்டுமானால் அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தலாம் என கூறினர். தற்போது அந்த நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் டெண்டர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. வருடத்துக்கு சுமார் 5 லட்சம் கிலோ வரை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் தேவைப்படுகிறது. இதற்காக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படுகிறது. இதில் பல்வேறு நெய் சப்ளையர்கள் போட்டியிடுவார்கள்.
இந்த டெண்டரில் கலந்துகொள்பவர்கள் தங்களது நெய்யின் தரச் சான்றையும் சேர்த்துதான் விண்ணப்பத்தையே அப்லோடு செய்ய வேண்டும். அதாவது சென்னை கிண்டியில் இருக்கும் Azodi Labs Pvt Ltd. உள்ளிட்ட சிற்சில பரிசோதனைக் கூடங்கள் இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைக் கூடத்தின் தரச் சான்று பெற்ற பிறகுதான் நெய்க்கான டெண்டர் ஃபார்மை அப்லோடு செய்ய வேண்டும். இதில் எல் 1, எல் 2 ஆகிய கடைசி இரு குறைவான கொட்டேஷன் கொடுப்பவர்களுக்குத்தான் ஆர்டர் கொடுக்கப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு பொருட்கள் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் வட்டாரத்தில் பேசியபோது,
“திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் லட்டு உள்ளிட்ட பொருள்களுக்கான தயாரிப்பில் மிகக் கட்டுப்படி ஆகாத விலையைதான் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கிறது. தேவஸ்தானம் சொல்கிற விலைக்கு தரமுள்ள பொருட்களை எந்த ஒப்பந்ததாரரும் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.
ஆந்திராவில் எந்த ஆட்சி நடந்தாலும் இதுதான் நிலைமை. இப்போது; லட்டுவை அரசியல் கையெறி குண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பக்தர்களுக்கு தரமான லட்டு கிடைத்தால் நல்லதுதான்” என்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து திருமலை கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதுலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “பிரசாதம் தயாரிப்பது குறித்து கடந்த காலங்களில் பலமுறை நான் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளேன். கலப்பட நெய்யை மட்டும் கொண்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது. இது குறித்து டிடிடி வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அலட்சியப்படுத்தப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் திருமலையில் பெரும் பாவம் நடந்துள்ளது. நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. கலப்பட நெய் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரமண தீட்சிதலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இனியாவது தரமான லட்டு உற்பத்தி செய்யப்படுமா என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பு!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு? : தமிழக அரசு விளக்கம்!
திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் நெய் நிறுவனத்தில் சோதனை!
கேசவ விநாயகத்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி!
“அந்த இடம் பாகிஸ்தானில் உள்ளது”: கர்நாடக நீதிபதி சர்ச்சைப் பேச்சு… உச்சநீதிமன்றம் விசாரணை!
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடக்கம்!
திருவண்ணாமலையில் பெண் கொலை : போலிச் சாமியார் கைது!