முத்திரைத் தாள் விலை உயர்வு: அறிமுக நிலையிலேயே நாகை மாலி எதிர்ப்பு!

அரசியல்

சட்டமன்றத்தில் முத்திரைத் தாள் விலை உயர்வு சட்ட முன்வடிவிற்கு திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சபாநாயகர் அப்பாவு “பேரவைக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. 2023 ஆம் ஆண்டு இந்திய முத்திரை தமிழ்நாடு திருத்த சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்ய ஆளுநர் இசைவை தெரிவித்துள்ளார்” என்று கூறி அரசினர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சருக்கு வாய்ப்பு அளித்தார்.

தொடர்ந்து வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எழுந்து நின்று “2023 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன்” என்றார்.

இதனையடுத்து சபாநாயகர், “வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது. ஏற்போர் ஆம் என்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான நாகை மாலி எழுந்து நின்றார்.

இதைக் கண்ட சபாநாயகர், “நாகை மாலி அவர்கள் வரவேற்று அமர்ந்தீர்களா?” என்று கேட்டார்.

இதற்கு நாகை மாலி “இல்லை” என்று கூறியதைக் கேட்டு சபாநாயகர் சிரித்தார். தொடர்ந்து நாகை மாலி, “கட்டணங்கள் எல்லாம் அதிகமாக இருக்கிறது” என்று பேசிக் கொண்டிருக்கும் போது, சபாநாயகர், “அறிமுக நிலையிலேயே எதிர்க்கிறேன், ஆதரிக்கிறேன் அல்லது விவரம் கேட்கிறேன். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைக் கூறுங்கள்” என்று சொன்னார்.

இதற்கு நாகை மாலி, ”அறிமுக நிலையிலேயே எதிர்க்கிறேன்” என்று கூறி அமர்ந்தார். பின்னர் மீண்டும் சபாநாயகர் வணிக வரித் துறை அமைச்சரின் தீர்மானத்தைப் பேரவையின் முடிவிற்கு விட்டார்.

தீர்மானத்தைப் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டதால், சட்டப்பேரவையில் முத்திரைத் தாள் விலை உயர்வு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

அதன்படி 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாள் 200 ரூபாயாகவும் 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாள் 1000 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முத்திரைத் தாள் விலை 10 மடங்கு அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

ராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு: கைதானவர் வாக்குமூலம்!

அணைந்து போன நெருப்பு: அதிமுகவை விமர்சிக்கும் அண்ணாமலையின் வலதுகரம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *