ராஜன் குறை
ஒன்றிய அரசை ஆளும் பாரதீய ஜனதா கட்சி பாசிசத்தன்மையுடன் இயங்குவதை, இந்தியாவின் பன்முகத்தன்மையை, மக்களாட்சி மாண்புகளை பல்வேறு தளங்களிலும் சிதைத்து வருவதை நாம் காண்கிறோம். அந்த தாக்குதல்களுக்கு திரைப்படத் துறையும் தப்பவில்லை.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை, பாஜக அரசு அழுத்தம் கொடுத்து போட்டி பிரிவில் இணைத்தது. போட்டிப் பிரிவில் இருந்த படங்களில் பரிசுக்கு உரியதை தேர்ந்தெடுக்க சர்வதேச திரைப்பட கலைஞர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப் பட்டிருந்தது. அதன் தலைவராக பணியாற்றியவர் இஸ்ரேலை சேர்ந்த இயக்குனர் நடாவ் லபீட்.
இவர் இறுதியாக பரிசளிப்பு விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை குறித்து கூறிவிட்டு, இறுதியாக காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் ஒரு மலிவான பிரசாரப் படம். ஒரு கெளரவமான திரைப்பட விழாவில் பங்கேற்கத் தகுதியற்ற படம். அதைப் பார்த்து எப்படி இது போன்ற ஒரு படம் போட்டிப் பிரிவிற்கு தேர்வானது என நடுவர் குழுவினர் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்தோம் என்று மனம் திறந்து பேசிவிட்டார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட த்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிப்பது, அதைப் பார்ப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு பணி நேரத்தில் செல்ல அனுமதியளிப்பது என கடும் ஆதரவு அரசு இயந்திரம் மூலமாக அளிக்கப் பட்டது. சங்க பரிவார அமைப்புகள் கடும் பிரசாரத்தை மேற்கொண்டன.
உதாரணமாக தலை நகர் டில்லியில் பல பகுதிகளில் வீட்டு பணியாளர்களுக்கு பணம் கொடுத்து இந்த படத்தை பார்க்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் இந்த படத்தை பாராட்டினார்கள்.
அத்தகைய படத்தை, அதன் உண்மையான தன்மையை, ஒரு அயல் நாட்டு திரைப்பட இயக்குனர், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், அமைச்சர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் அம்பலப்படுத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசின் தன்மையை அறிந்து அஞ்சிய இஸ்ரேலிய தூதர் உடனே தன் நாட்டை சேர்ந்த நடாவ் லபீட்டை கடுமையாக “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?” என்ற அளவில் கேட்டு கண்டித்து விட்டார். “உங்களுக்கென்ன நீங்கள் பேசிவிட்டு சென்றுவிடுவீர்கள்; நானும் என் அலுவலக பணியாளர்களும் இங்கேதான் வசிக்கவேண்டும்” என்று இந்திய பாசிச சூழல் குறித்த தன் அச்சத்தையும் வெளிப்படுத்திவிட்டார்.
வட இந்திய ஊடகங்கள் எல்லாம் பாஜக அரசின் ஊதுகுழல்கள் என்பதால் நடாவ் லபீட்டை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துவிட்டன. அவர் சளைக்காமல் அனைவருக்கும் மிகவும் தெளிவாக, துல்லியமாக தன் நிலைபாட்டை விளக்கினார்.
நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு இந்தியர், சுதிப்தோ சென் என்பவர் நடாவ் லபீட் கூறியது நடுவர் குழுவின் கருத்தல்ல, அவர் சொந்தக் கருத்து என்று கூறியதை அடுத்து, அவர் எப்படி நடுவர் குழுவின் கருத்தாக அதைக் கூறலாம் என்று துளைத்து எடுத்தனர்.
உடனே நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த மற்ற மூன்று வெளி நாட்டு கலைஞர்களும் தாங்களும் நடாவ் லபீட்டின் கருத்தை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறிவிட்டனர். இந்திய உறுப்பினர் மட்டும்தான், இஸ்ரேலிய தூதர் போல, இந்தியாவில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற அச்சத்தாலோ என்னவோ, தனக்கு அந்தக் கூற்றில் தொடர்பில்லை என்று கூறி விலகி நிற்கிறார்.
காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்தின் வெறுப்பரசியலை, பாசிசத்தன்மையை அறிந்த இந்தியர்கள், சிந்தனையாளர்கள், முற்போக்காளர்கள் நடாவ் லபீட்டை அவருடைய துணிச்சலுக்காகவும், நேர்மைக்காகவும் கொண்டாடி வருகிறார்கள். ஊதுகுழல் ஊடகங்கள் சில நடாவ் லபிட் வருத்தம் தெரிவித்தார், கருத்தை மாற்றிக்கொண்டார் என்று பொய்களை பரப்பி வருகின்றன.
இந்த பிரச்சினையின் ஆழத்தைக் காண நாம் இந்திய வெகுஜன சினிமா, காஷ்மீர் பிரச்சினை, சினிமா கலை இயங்கும் விதம் ஆகிய மூன்று அம்சங்களை சுருக்கமாக புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய வெகுஜன சினிமாவின் தேசிய உணர்வு எத்தகையது?
இந்திய சினிமா அதன் துவக்க காலத்திலிருந்தே வெகுஜனத்தன்மை கொண்டதாக இருந்தது. வெகுஜனத் தன்மை என்பதன் குணாதிசயங்களில் ஒன்று நல்லவற்றை நினைவில் கொள்வது, தீயவற்றை மறப்பது என்பதாகும். சமூகங்கள் தங்களுக்குள்ளான மோதல்களை எப்போதுமே நினைவில் கொண்டு பழிவாங்குவதும், பழிவாங்க துடிப்பதுமாக வாழ்வது இயலாது. அதனால் மன்னித்தலும் மறத்தலும் வாழ்வை தொடர்வதற்கு இன்றியமையாதவை.
உதாரணமாக துவக்க கால தமிழ் திரைப்படங்களில் தீயவர்கள் கொல்லப்பட மாட்டார்கள். அவர்கள் மனம் திருந்துவார்கள். எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களான நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் ஆகியவற்றில் கூட கொடுங்கோல் அரசர்கள் மனம் திருந்தி மக்களாட்சியை ஏற்றுக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஆட்சியை கொடுத்தால் அவர் நீங்களே ஆளுங்கள், மக்களாட்சி முறைப்படி ஆளுங்கள் என்று கூறிவிடுவார்.
மற்றொருபுறம் உலகெங்கும் கலைஞர்கள் எடுக்கும் அறிவார்த்தமான திரைப்படங்களில் நல்லவர்கள், தீயவர்கள் என்பதை கறுப்பு வெள்ளையாக, அதாவது கலப்படமில்லாத நல்லவர், தீயவர் என்று வேறுபடுத்திக் காட்டி தீமையை நன்மை வெல்வதாகக் கூற மாட்டார்கள்.
கலைஞர்கள் எந்த சமூக அடையாளம் கொண்ட மனிதர்களிடமும் நல்லவையும், தீவையும் கலந்திருப்பதையே சித்தரிப்பார்கள். ஏனெனில் அதுவே நம் சிந்தனைக்கும், உணர்தலுக்கும் முக்கியமான சவாலாகும். உதாரணமாக ஓனிர் (Onir) என்ற இயக்குனர் எடுத்த I AM (2011) என்ற படத்தில் புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் பெண் தன் வீட்டிற்கு திரும்பிச் செல்வாள். அங்கே அண்டை வீட்டாரான முஸ்லீம்கள் அனுபவித்த கொடுமைகளையும் அறிந்து கொள்வாள்.
இந்த இரண்டு வகை சினிமாக்களுமே ஒரு குறிப்பிட்ட வரலாற்று சம்பவத்தை, துயரத்தை, சமூக மோதலை படம் பிடிக்கும்போது ஒரு தரப்பாரை முழுவதும் தீயவர்களாக படம் பிடிப்பதோ, அவர்கள் மீது பார்ப்பவர்களுக்கு வெறுப்பும், கோபமும் வரும்படி காட்சிகளை அமைப்பதோ தவறு என்பதை ஏற்றுக்கொள்பவை.
இத்தகைய பின்னணியில்தான் வெகுஜன தமிழ் சினிமாவும் சரி, இந்தி சினிமாவும் சரி இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தி வந்துள்ளன. இந்தியில் வெளியான “அமர், அக்பர், ஆண்டனி” (1977) என்ற திரைப்படம் இந்தியா முழுவதிலும் கொண்டாடப்பட்ட மிகப்பெரிய வெற்றிப்படமாகும். அதை குறித்து வில்லியம் எலிசன், கிறிஸ்டியன் லீ நொவாட்ஸ்கே, ஆண்டி ரோத்மன் ஆகிய அமெரிக்க பல்கலைகழக பேராசிரியர்கள் சிறப்பானதொரு ஆய்வு நூலை ஏழுதியுள்ளார்கள்.
காஷ்மீரில் நடந்தது என்ன?
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த கலவரங்கள், மோதல்கள் காரணமாக அங்கே வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் எனப்படும் வகுப்பினர், சற்றேறக்குறைய ஒரு இலட்சம் பேர், அங்கிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது. இது ஐயத்திற்கு இடமின்றி ஒரு பெரும் துயர சம்பவம்.
அவர்களில் அரசு பதவியிலிருந்தவர்கள், பிரமுகர்கள் சிலர் கொல்லப்பட்டதும், காஷ்மீர் முஸ்லீம் விடுதலை இயக்கங்கள் சில அவர்களை இந்திய அரசு ஆதரவாளர்கள் என வெளியேறச்சொல்லி அச்சுறுத்தியதும் காரணங்கள் என சொல்லப்படுகிறது. எந்த வகையில் நிகழ்ந்திருந்தாலும், இது போன்ற கட்டாய வெளியேற்றங்கள் கண்டனத்திற்குரியவை என்பதில் ஐயமில்லை.
ஆனால் காஷ்மீரின் சமகால வரலாற்றை அறிந்தவர்கள், இருநூறு ஆண்டுகால காஷ்மீர் பிரச்சினையின் ஒரு பகுதியாகத்தான் இதை பார்ப்பார்கள். குறிப்பாக காலனீய அரசு டோக்ரா இந்து மன்னர்களிடம் அறுதிப் பெரும்பான்மையாக முஸ்லீம் விவசாயிகள் நிறைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் (Kashmir Valley) ஆட்சியை 1846-ஆம் ஆண்டு ஒப்படைத்ததிலிருந்து ஒரு புதிய சகாப்தம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் துவங்குகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கை உள்ளிட்ட சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைவதா, இந்தியாவுடன் இணைவதா, தனித்தே இருப்பதா என்ற கேள்வி எழுந்தது. இந்து மன்னர் மக்களின், பாகிஸ்தானின் அழுத்தம் மிகுந்த சூழ்நிலையில் இந்தியாவுடன் இணைவதாக கையெழுத்து இட்டுவிட்டார். இந்திய அரசு உடனே ராணுவத்தை அணுப்பி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து தலை நகரை காத்துவிட்டது.
அதிலிருந்து பாகிஸ்தான் காஷ்மீரில் மக்களின் விருப்பம் எதுவென அறிய Plebiscite என்ற பொதுவாக்கெடுப்பு நட த்தப்பட வேண்டும் என்று கோரி வந்தது. ஜவஹர்லால் நேருவும் நிலமை சீரடைந்ததும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாகக் கூறினார். ஆனால் அது நிகழவில்லை.
அதன்பிறகு அவ்வப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுதந்திரம் கோரும் இயக்கங்கள் உருவாவது காட்டுத் தீ போல நிகழ்ந்து வந்தது. மாநில அரசியல் கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் நடக்கும் தேர்தல் போட்டியும் தீயை பெரிதாக்கின. பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு சிறு பகுதியை கைப்பற்றி வைத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயும் காஷ்மீர் எல்லை பிரச்சினை ஒரு முடிவுறா பிரச்சினையாக நீடித்து வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் எழுபது இலட்சம் முஸ்லீம்களிடையே தீவிரவாதிகளை தேடித் தண்டிக்கிறோம் என்ற பெயரில் இந்திய ராணுவம் பல பத்தாண்டுகளாக அங்கே குவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே குடிமக்களிடையே அதிகமாக ராணுவம் குவிக்கப்பட்ட பகுதி இதுதான் எனப்படுகிறது. இது பொதுமக்களுடன் அன்றாடம் கடும் உரசல் ஏற்படவும், அவ்வப்போது இரு புறமும் வன்முறை தாக்குதல்கள் நிகழவும் காரணமாகிறது.
எளிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் என்பது அன்றாட நிகழ்வாகவே வெகுகாலமாக இருக்கிறது. ஏராளமான முஸ்லீம் குடிமக்கள் தீவரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையில் சிக்கி வன்முறைக்கு ஆளாகியுள்ளார்கள். புரையோடிப் போன பிரச்சினைக்கு அரசியல் தீர்வு சாத்தியமில்லாமல் இருக்கிறது.
இந்த நீண்ட கால பிரச்சினையின் ஒரு அத்தியாயம்தான் காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம். அன்றைய ஆளுனர் ஜக்மோகனின் தவறான அணுகுமுறைகளும் அதற்கொரு காரணம் எனப்படுகிறது. அதை பயங்கரமான ஒரு இனப்படுகொலையாக சித்தரித்து முஸ்லீம்களுக்கு எதிரான இந்து மன நிலையை கட்டமைப்பது ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா, பாரதீய ஜனதா கட்சி ஆகிய சங்க பரிவார அமைப்புகளின் பிரசாரப் பணியாக இருந்து வருகிறது.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நிகழ்ந்ததையே காட்டுகிறதா?
நடாவ் லபீட்டின் விமர்சனத்தை எதிர்கொள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி என்ன கூறுகிறார் என்றால் தன் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் எதாவது உண்மையில் நடக்கவில்லை என்று நிரூபிக்க முடியுமா என்று கேட்கிறார். உண்மையை எடுத்தால் அது பிரசார படமா என்று கேட்கிறார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் போன்று நடிகர்களை நடிக்க வைத்து எடுக்கப்படும் புனைவு சினிமா (feature film) மட்டுமல்ல, ஆவணப் படங்களே (documentary films) கூட நடந்தவற்றை அப்படியே காட்ட இயலாது. காரணம், எந்த இட த்தில் காமிராவை வைக்கிறோம், எந்த கோணத்தில் காட்டுகிறோம், எது காட்சிப்புலத்தினுள் (frame) வருகிறது, எது வரவில்லை என்பது போன்ற மாறுபாடுகளுக்கு உட்பட்டுதான் எதையும் படம் பிடிக்க முடியும்.
ஒருவர் காலையில் எழுந்தவுடன் பல்துலக்குவதை காட்டலாம்; காலைக்கடன் கழிப்பதை காட்ட முடியாது அல்லது கூடாது. ஆடையின்றி குளிப்பதை காட்டுவது தகாது. குறிப்பால் உணர்த்தலாம்.
வரலாற்று நிகழ்வுகள் என்றாலோ, ஒரே நேரத்தில் நடக்கும் பல நூறு விஷயங்களில் சிலவற்றைத்தான் தேர்வு செய்து காட்ட முடியும். படத் தொகுப்பு என்பதன் மூலம் உருவாகும் காட்சி தொடர்ச்சி அல்லது அர்த்தம்தான் அந்த நிகழ்ச்சியை திரையில் உருவாக்குகிறது. எனவே திரை நிகழ்வு அதாவது திரையில் தோன்றும் காட்சித் தொகுப்பு என்பது தனித்துவமானது. அது இயக்குனர் உருவாக்குவது.
இவ்வாறு உருவாகும் படம் நல்ல படமா இல்லையா என்பது அதன் காட்சித் தொகுப்பில், அது கதை கூறும் முறையில்தான் உள்ளதே தவிர, அது காட்டும் சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்ததா இல்லையா என்பதை பொறுத்ததல்ல.
ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்பும், அதனுடன் இணைந்த பின்னணி இசை, ஒலி, பாடல், வசனம் போன்றவையும் இணைந்து நம்மிடம் உணர்வலைகளை ஏற்படுத்துகின்றன; உணர்வுத் தாக்கத்தை நிகழ்த்துகின்றன. அந்த தருணத்திலிருந்து அந்த தாக்கம் வெறுமே உணர்ச்சிகளைத் தூண்டுகிறதா, அல்லது அறிவை, சிந்தனையைத் தூண்டுகிறதா என்பதில்தான் அந்த சினிமா நல்ல சினிமாவா இல்லையா என்று கூறமுடியும்.
ஒரு நீலப்படத்தை பார்த்தால், அது பாலுணர்வு கிளர்ச்சியைத் தூண்டும். அங்கே அறிவுக்கு வேலையில்லை. அதே போல வன்முறை உணர்ச்சியை, வெறுப்பை, கோபத்தை ஏற்படுத்தும் காட்சிகளும் மலினமானவையே.
ஒரு வன்முறை நிகழ்வை காட்டும் போது பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு வன்முறை எண்ணங்களை பெறக்கூடாது. மாறாக வன்முறையை தவிர்க்க நினைக்க வேண்டும். அல்லது நாடகீயமானதாக வன்முறையை விலகி நின்று உணரவேண்டும். அன்னியப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்தை வெறுக்கும்படி காட்சிகளை அமைத்தால் அது பாசிச படமே.
ஒரு தொலைகாட்சியில் இஸ்ரேலிய யூதரான நடாவ் லபீட்டிடம் நீங்கள் ஜெர்மனியில் நிகழ்ந்த யூதப் படுகொலையை (Holocaust) மறுப்பீர்களா என்று வக்கிரமாகக் கேட்டார்கள். நடாவ் கலங்காமல் பதில் சொன்னார். யூதப் படுகொலையை வைத்தும் ஒரு பாசிச சினிமாவை எடுத்துவிட முடியும் என்று கூறினார். ஜாதி,மத, இன பேதங்களை கடந்த கலையின் மனசாட்சியாக ஒலித்த நடாவ் லபீட் நம் போற்றுதலுக்குரியவர் என்பதில் ஐயமில்லை.
தேசிய அரசுகளும், சுயாட்சி பகுதிகளும்
தமிழைக் காத்து நிற்கும் திராவிட பண்பாடு! காசி தமிழ் சங்கமம் உணர்த்தும் உண்மை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!
கிச்சன் கீர்த்தனா: ஈஸி மஷ்ரூம் ஃப்ரை
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
நன்றி.