naam tamizhar katchi menaka

குடியால் தம்பி கொலை, பணிமனை அமைக்க கூட இடமில்லை: குமுறும் ’நாம் தமிழர்’ வேட்பாளர்

அரசியல்

2 நாளுக்கு முன் தனது தம்பி குத்தி கொலை செய்யப்பட்டான் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா பரபரப்பாகப் பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகாவை அறிவித்தார் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

naam tamizhar katchi menaka

அவர் இன்று (பிப்ரவரி 2) கையில் கரும்போடு பேரணியாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

naam tamizhar katchi menaka

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் மேனகா, “ஈரோட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது சாயக்கழிவு நீர் தான். மஞ்சள் மாநகரம் அப்படினு அழகான பெயர் இருக்கக்கூடிய ஈரோடு இப்போ கேன்சர் (புற்றுநோய்) என்ற பெயருக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றப்பட்டு வருகிறது.

கேன்சரால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குச் சாய கழிவுநீர் தான் காரணம். சாய தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரக்கூடிய கழிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் வெற்றி பெற்று வந்தால், முறையாகக் கழிவுகளை அகற்றாத தொழிற்சாலைகளைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை முதலில் நாங்கள் எடுப்போம்.

அடுத்ததாக பெரும்பள்ள ஓடை பிரச்சனை இருக்கிறது. ஈரோட்டின் குடிநீர் ஆதாரமாக இருக்கக் கூடிய பெரும்பள்ள ஓடையை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மூடி கொண்டிருக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஈரோடு மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் இருக்கின்றது.

பெரும்பள்ள ஓடை அருகே உள்ள மக்கள் 20 கிலோ மீட்டர் தாண்டி இருக்கக்கூடிய சித்தோடு, சென்னிமலை போன்ற இடங்களுக்குக் குடி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு மக்களுக்கு அவர்களுடைய இடமே இல்லாத நிலை வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நாங்கள் வெற்றி பெற்றால் பெரும்பள்ள ஓடையை மீட்டெடுத்து, குடிநீர் ஆதாரத்தை அதிகரிப்போம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாற்றியமைக்கப்படும்.

தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் போது, அத்துமீறி நிறைய பார்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லக் கூடிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்று மக்கள் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அதிகாரம் எங்கள் கைகளுக்கு வந்தவுடன் அத்துமீறி நடக்கக்கூடிய பார்களை எதிர்த்துப் போராடுவோம்” என்றார்.

சீமான் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்ற கேள்விக்கு, “அண்ணன் பிப்ரவரி 13 ஆம் தேதி பிரச்சாரத்தில் கலந்து கொண்டு தேர்தல் முடியும் வரை ஈரோட்டில் தான் இருப்பார்.

வடமாநிலத்தவர்கள் அதிகமாகத் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் கூலித்தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள் கையில் அனைத்தும் மாறிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் வெற்றி பெற்றதும் வடமாநிலத்தவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடி என்னுடைய தம்பி சொந்த தாய்மாமனால் குத்தி கொலை செய்யப்பட்டான். அதற்குக் காரணம் குடிதான். இப்ப என் தம்பி என்கிட்ட இல்லை. குடியை ஒழித்தால் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
அதனால் குடியை ஒழிப்பதற்கு நாங்கள் வேலை செய்வோம்” என்று கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, “அவங்க சொல்லிட்டு மட்டும் தான் இருக்காங்க. எதுவும் செய்யவில்லை. நாங்கள் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம்.

பெண் வேட்பாளராக இருப்பதால் அச்சுறுத்தல்கள் நிறைய இருக்கின்றது. வேட்பாளராக நான் நிற்பதால் பணிமனைக்குக் கூட ஒரு இடத்தை தேர்வு செய்யமுடியவில்லை.

இடத்தை தேர்வு செய்து அட்வான்ஸ் கொடுத்தாலும், உங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் எங்களுக்கு நிறையப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். இதை எல்லாம் தாண்டி நாங்கள் நிச்சயம் வருவோம்” என்று பேசினார்.

மோனிஷா

திமுக தொண்டரின் வீட்டில் 16 அடி உயர கருணாநிதியின் பேனா!

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன பதில் என்ன?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *