Naam Tamilar Katchi case supreme court
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 1) மறுத்துள்ளது.
விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல்!
நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேர்தல் விதிமுறை மற்றும் தேர்தல் வரைவுப்படி பார்த்தால் கரும்பு விவசாயி சின்னம் எனக்கு தான் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது பக்கத்து மாநிலத்தை சேர்ந்த புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள்.
நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு ஒருவருக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். நாங்கள் வளர்ந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சிக்கு தான் முன்னுரிமை!
இந்தநிலையில், மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்ககோரி அக்கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.
நாம் தமிழர் கட்சி தரப்பில், “பல ஆண்டுகளாக தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகிறோம். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 6 சதவிகிதம் வாக்குகளை வைத்துள்ளோம்.
ஆனால், இந்த தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். எங்களுக்கு தான் தேர்தல் ஆணையம் முன்னுரிமை வழங்க வேண்டும். வேண்டுமென்றே கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. சின்னத்தை ஒதுக்குவது பற்றி ஆணையம் மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சின்னம் ஒதுக்கியதில் விதிமீறல் இல்லை!
இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில், “கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ள பாரதிய பிரஜா ஐக்யதா கட்சி கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி விண்ணப்பம் செய்தனர். ஆனால், நாம் தமிழர் கட்சி தரப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி தான் விண்ணப்பிக்கப்பட்டது.
முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. இதில் எந்த விதிமீறலும் இல்லை.
இப்படி மனுத்தாக்கல் செய்து ஒவ்வொரு கட்சிகளும் சின்னம் பெற்றார்கள் என்றால், நூற்றுக்கணக்கான கட்சிகள் சின்னம் கோரி நீதிமன்றத்தை நாடுவார்கள். அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
தேர்தலில் போட்டியிட்டு போதுமான வாக்கு சதவிகிதத்தை அடைந்து தேவையான எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையை இக்கட்சி பெறட்டும். பின்னர் அவர்கள் கேட்கும் சின்னத்தை நாங்கள் ஒதுக்குகிறோம். இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி எப்படி எங்களை குறை கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
கரும்பு விவசாயி சின்னம் லக்கி இல்லை!
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், “கரும்பு விவசாயி சின்னம் என்பது Free Symbol. முன்னுரிமை அடிப்படையிலேயே இந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இதுதான் நடைமுறை இதை எப்படி மாற்ற முடியும்? நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் லக்கி இல்லை.
நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை கேட்க முடியும்? ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்துடன் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டுள்ள கட்சிக்கு தான் நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா!
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் : ஸ்டாலினை சாடிய எடப்பாடி
Naam Tamilar Katchi case supreme court