முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 13) அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று என்.சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க அளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை?
சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?