பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் நேற்று (பிப்ரவரி 19 ) காலமானார். அவருக்கு வயது 57. தீவிர சிவ பக்தர் மட்டுமின்றி சமூக சேவை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். எம்.ஜி.ஆரின் தீவிர பற்றாளார்.
இப்படி அவர் உதவி, உதவி, உதவி என்றுதான் எம்.ஜி.ஆரின் பற்றாளராக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.
இப்படி வாழ்ந்த அவர் சமகால அரசியல் பற்றியும் பேச மறக்கவில்லை. அப்படி அவர் பேசிய அனல் பறந்த விவாத மேடைகளின் தொகுப்புகளை பார்க்கலாம்:
எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த நேரத்தில் தனியார் நிகழ்ச்சியில்( டிசம்பர் 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு ) கலந்து கொண்ட போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் .
அதில் “ எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை சின்னாபின்னமாக எடப்பாடி பழனிசாமி மாற்றுவதாக குற்றம் சாட்டினார்.
ஒரு முதலமைச்சர்(எடப்பாடி பழனிசாமி ) எழுதி கொடுப்பதை கூட தவறாக படித்தால் அதிமுக தொண்டர்களும், மக்களும் (அதிமுகவை பற்றி ) என்ன நினைப்பார்கள் என்று கோபமுடன் பேசினார்.
பெயருக்கு தான் அண்ணா திமுகவாக இருக்கிறது ஆனால் பாஜக வின் பினாமியாக ( அதிமுக )செயல்படுவதாக தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார்.
மேலும், ஜெயலலிதா இருந்திருந்தால் ஜி.எஸ்.டி , நீட் தேர்வுகளை எதிர்த்து இருப்பார் ஆனால் சமகால அதிமுக (ஜி.எஸ்.டி ,நீட் தேர்வுகளை அதிமுக எதிர்க்கவில்லை ) அதை எதையும் செய்யவில்லை என தன்னுடைய கடும் கண்டனங்களை அந்த நிகழ்ச்சியில் பதிவு செய்தார் அந்த வீடியோ அப்போது அதிமுக தலைமையிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதேபோல் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தொடர் போராட்டம் 2018-ல் நடைபெற்றது. 100-வது நாளாக 22-5-2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் பெரிய அளவிலும், 64 பேர் சிறிய அளவிலும் காயமடைந்தனர். அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அந்த நேரம் மயில்சாமி தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்ய தவறவில்லை.
அதிமுக அரசு மக்களுக்கானதா இல்லை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று சொன்ன அவர் ஒரு தொழிற்சாலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிமுக அரசு ஏன் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற கேள்வி மூலம், தான் மக்கள் பக்கம் தான் எப்போதும் என்று சாமானியர்களுக்கும் புரியும் படி விளக்கினார்.
நரிக்குறவர்கள் காக்காவையும் , குருவியையும் சுடக்கூடாது என்று துப்பாக்கியை வாங்கி வைத்து கொள்ளும் அரசாங்கம் மக்களை மட்டும் எப்படி சுட அனுமதிக்கிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
எதற்கெடுத்தாலும் ’’அம்மா அரசு, அம்மா அரசு’’ என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்துவதாக கூறினார்.
அராஜகத்தை மட்டும் தான் ஜெயலலிதா அடக்குவார் போராட்டத்தை அல்ல.
ஆனால் இவர்கள் தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதாகவும் ஒரு வருட ஆட்சியில் (எடப்பாடி முதலமைச்சராக இருந்தார் ) எந்த சாதனையையும் செய்ய வில்லை என்றும் தன்னுடைய கண்டனங்களை ஒரு தனியார் நிகழ்ச்சியில் பதிவு செய்தார். தூப்பாக்கிச் சூட்டில் சுட்டுகொல்லப்பட்டவர்களை கடந்த 24 மணி நேரம் வரை( 2018 ஆம் ஆண்டு ) எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் சென்று பார்க்க வில்லை என்று இருவரையும் (இபிஎஸ், ஓபிஎஸ்) கடுமையாக சாடினார்.
சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக அரசு (அதிமுக ) சொல்வதையும் விமர்சனம் செய்தார்.
2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த நேரம் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆரின் பற்றாளரான மயில்சாமி அதிமுகவின்ஆட்சியை விமர்சிக்க தவறவில்லை . தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் மக்களுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். அப்போது அவர் தனியார் யூடியூப் சேனலிடம் பேசினார். அதில் நான்கு வருடமாக (அதிமுக ஆட்சி ) எதுவும் சரியில்லை என்றார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளார் ”பாஜகவை தமிழ்நாட்டில் தடுக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சொல்கிறார்களே, அதை பற்றியும் பாஜக வை பற்றியும் உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்க ,
அதற்கு பதிலளித்த மயில்சாமி ”என்னுடைய மண்ணை ஒரு பொழுதும் தேசிய கட்சிகள் ஆளக் கூடாது என்றும் இந்தி மொழி பேசுபவர் தமிழ்நாட்டை ஆளக் கூடாது என்றும் பாஜகவுக்கு எதிரான தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார். நான்கு வருட அதிமுக ஆட்சியும் சரியில்லை என்றார்.
இப்படி அவர் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் ஆதரவான தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் தெளிவுபடுத்தியதன் மூலம் அவர் இறந்து போனாலும் தமிழ் நெஞ்சங்களில் எப்போதும் வாழ்வார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் கட்டணம்: கலாய்த்த எலான் மஸ்க்
விபத்திற்கு முன்பே சேதமடைந்திருந்த மோர்பி பாலம்: விசாரணை அறிக்கையில் பகீர்!