என்னை தகுதி நீக்கம் செய்தால் வயநாட்டுடனான உறவு முறிந்து விடும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் வயநாட்டுடனான எனது உறவு மேலும் வலுவடையும் என்பதே உண்மை என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
மோடி சமூகத்தினர் குறித்து தவறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் விதித்த இரு ஆண்டுகள் சிறை தண்டனையால் ராகுல்காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பங்கேற்று உரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் பதவி ஏற்ற பின் அவர் முதன்முறையாக கேரளாவில் உள்ள தனது வயநாடு தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக இன்று சென்றுள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து கார் மூலமாக பகல் 12 மணியளவில் உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார்.
பின்னர் முத்தநாடு மந்த் பகுதியில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.
தொடர்ந்து கேரளாவின் வயநாடுக்கு சென்ற ராகுல்காந்தி கல்பெட்டாவில் மாலை நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர், ”மணிப்பூரில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெண்கள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதத்தின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஜாலியாக இருந்தனர்.
மணிப்பூரை அழித்துவிட்டதாக பாஜக நினைக்கிறது. இதையொட்டி தற்போது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான யுத்தம் நடந்து வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மணிப்பூரை மீண்டும் ஒன்றிணைப்போம். அவர்களுக்கு இந்தியாவின் அன்பை மீண்டும் வழங்குவோம்” என்றார்.
தொடர்ந்து அவர், “பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் குடும்பம் என்றால் என்னவென்று புரியவில்லை, உங்களையும் என்னையும் எவ்வளவு அதிகமாகப் பிரிக்க முயல்கிறார்களோ, அவ்வளவு நெருக்கமாவோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
என்னை தகுதி நீக்கம் செய்தால் வயநாட்டுடனான உறவு முறிந்து விடும் என்று பாஜக நினைக்கிறது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், வயநாட்டுடனான உறவு மேலும் வலுவடையும் என்பதே உண்மை” என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
கூட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான சாவியையும் வழங்கினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
HACT2023: டிராவை நோக்கி தள்ளிய கொரியா… தட்டித்தூக்கிய ஜப்பான்!
டிஜிட்டல் திண்ணை: அப்ரூவர் ஆகிறார் செந்தில் பாலாஜி தம்பி மனைவி?