நாட்டின் சுதந்திரத்திற்காக, அனைத்து மக்களின் இதயத்தில் உள்ள இலட்சியங்களுக்காக எனது எதிர்காலத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என தனது தேர்தல் இறுதியுரையில் கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது அரிசோனா மற்றும் நெவாடா மாகாணங்களில் மட்டும் இன்றும் (நவம்பர் 7) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற 270 தேர்தல் வாக்குகள் தேவை என்ற நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 296 தேர்தல் வாக்குகளுடன் அபார வெற்றியை பெற்றுள்ளார்.
அதே வேளையில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் முயற்சியுடன் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 226 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ், தனது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோருடன் மேடையேறி தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் இன்று கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “என் இதயம் இன்று நிரம்பியுள்ளது. என் இதயம், நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றியுடனும், நம் நாட்டின் மீதான அன்புடனும், முழு மன உறுதியுடனும் உள்ளது.
இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது அல்ல, நாங்கள் போராடியது இதற்காக அல்ல, நாம் வாக்களித்தது இதற்காக அல்ல.
அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை படி, தேர்தலில் தோற்றால், முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதன்படி இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது வாக்குறுதியின்படி அமெரிக்காவின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் ” என்றார்.
இதன்மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ள மறுத்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அவர், “வெற்றி பெற்ற ட்ரம்பை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு உதவுவதாக கூறினேன்.
நாட்டின் சுதந்திரத்திற்காக, வாய்ப்புக்காக, அனைத்து மக்களின் நேர்மை மற்றும் கண்ணியத்திற்காக, நமது தேசத்தின் இதயத்தில் உள்ள இலட்சியங்களுக்காக எதிர்காலத்துக்கான எனது போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
அமெரிக்காவின் பெண்கள் தங்கள் சொந்த உடலைப் பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது.
துப்பாக்கி வன்முறையிலிருந்து நமது பள்ளிகள் மற்றும் நமது தெருக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிட போவதில்லை.
அமெரிக்கா, நமது ஜனநாயகத்துக்காகவும், சட்டத்தின் ஆட்சிக்காகவும், சம நீதிக்காகவும், வரும் தேர்தல்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுச் சதுக்கத்திலும் நமது போராட்டம் தொடரும்.
மதிக்கப்பட வேண்டிய மற்றும் நிலைநிறுத்தப்பட வேண்டிய நமது உரிமை மற்றும் சுதந்திரம் என்ற புனிதமான எண்ணத்துக்காகப் போராடுவதை நாம் ஒருபோதும் கைவிட கூடாது. நமது நாட்டிற்காக போராடுவது முக்கியமானது.
ஜனநாயக கட்சியின் இளம் ஆதரவாளர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். தேர்தல் முடிவு உங்களுக்கு வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருப்பதை புரிந்துக்கொள்கிறேன். ஆனால் அது சரியாகிவிடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் நமது போராட்டம் வெற்றி பெற சிறிது நேரம் எடுக்கும். அது தோல்விக்கான அர்த்தம் அல்ல. நாம் ஒருபோதும் கைவிட கூடாது என்பதும், தொடர்ந்து போராட வேண்டும் என்பதும் முக்கியமானது.
நாட்டில் சிலர் அமெரிக்கா இருண்ட காலத்திற்குள் நுழைவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு நான் கூறுகிறேன். “இருட்டாக இருந்தால் மட்டுமே, நீங்கள் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். வானத்தை நிரப்பும் நட்சத்திரங்கள் போன்று, நமது வாழ்க்கையை உண்மை, நம்பிக்கை மற்றும் சேவை என்ற ஒளிகளால் நிரப்புவோம்” என்று கமலா ஹாரிஸ் பேசினார்.
தேர்தலுக்கு பின்னர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப் மற்றும் கமலா இருவரும் தங்களது உரையை ஆற்றிய நிலையில் அதிபர் ஜோ பைடன் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : டார்கெட் செய்யப்படும் வைல்டு கார்ட் ஹவுஸ்மேட்ஸ்!
”கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : தலைமைச்செயலக சங்கம் புகார்!