பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக இன்று (அக்டோபர் 24) பதவி ஏற்றார்.
இங்கிலாந்தில் நிலவி வரும் பொருளாதாரா நெருக்கடி காரணமாக கடந்த 7 மாதங்களில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். போரிஸ் ஜான்சனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி பதவியேற்ற 45 நாட்களிலேயே பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற புதிய பிரதமருக்கான தேர்தலில் பெரும்பான்மையான எம்பிக்கள் ஆதரவுடன், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நேற்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் பிரதமர் பதவிக்கும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு இந்திய பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரிட்டனின் முதல் இளம் பிரதமர்!
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக், பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸை இன்று நேரில் சந்தித்தார்.
அப்போது ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த அரசர் மூன்றாம் சார்லஸ், பிரதமராக பதவியேற்று புதிய அரசை அமைக்கும்படி அழைப்பு விடுத்தார்.
அதன்படி, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார்.

இந்தியாவை ஆண்ட நாட்டில் வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவி ஏற்பது இதுவே முதன் முறை.
மேலும் கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டில் பதவியேற்ற முதல் இளம் பிரதமர் என்ற பெருமையையும் ரிஷி சுனக் (42) பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டு வாயிலில் நாட்டு மக்களுக்கு ரிஷி சுனக் உரையாற்றினார்.
பொருளாதாரம் சீரமைப்பே முதல் இலக்கு!
அவர் பேசுகையில், “நம் நாடு ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதே எனது முதல் இலக்கு” என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ”எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.

எனது செயல் பேசப்படும்!
பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்பாடுகளை நிறைவேற்றுவேன். குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட செயல் பேசப்படும்.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த லிஸ் டிரஸ் விரும்பியதில் தவறில்லை. இது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சியை நான் பாராட்டினேன். ஆனால், சில தவறுகள் நிகழ்ந்தன. தவறுகள் இருந்தாலும் அதில் கெட்ட எண்ணங்கள் இல்லை.
பிரெக்சிட் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தும் பொருளாதாரத்தை எனது அரசாங்கம் உருவாக்கும்.” என்று ரிஷி சுனக் பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா