முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி வழங்கிய வீணை, தற்போதும் பாதுகாப்பாய் இருப்பதை அறிந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காசிக்கும்(வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது.
இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா, கடந்த நவம்பர் 19ஆம் தேதி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “கர்நாடக சங்கீதத்தின் மாமேதை முத்துசாமி தீட்சிதர், இங்கே கங்கையில் மூழ்கி எழுந்தபோது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்து இருக்கிறார்.
அந்த வீணை இன்னும் இருக்கிறது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி வீணை வழங்கியது தொடர்பாக இளையராஜா பேசியது குறித்து, சமூக வலைதளங்களில் அதுபற்றிய தேடல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
காசி, திருநெல்வேலி எனப் பல இடங்களில் அந்த வீணை இருப்பதாக தகவல்கள் எழுந்தன.

இறுதியில் அந்த வீணை, கோயம்புத்தூரில் வசிக்கும் முத்துசாமிதீட்சிதரின் சகோதரர் வழிவந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் இருப்பதாக தினமலர் இணையதளம் நேற்று(நவம்பர் 23) ’கோவையில் பூஜிக்கப்படும் முத்துசாமி தீட்சிதர் வீணை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
கோவையில் ஆண்டுதோறும், சத்காரியா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் முத்துசாமிதீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி இசைவிழாவில், அந்த வீணை எடுத்து வரப்பட்டு ஆராதிக்கப்படுவதாகவும் அது செய்தி வெளியிட்டிருந்தது.
முத்துசாமிக்கு கிடைக்கப் பெற்ற வீணை, இப்போதும் பாதுகாப்பாய் இருப்பதை அறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “காசியிலுள்ள தாய் கங்கை நதிக்கரையில் முத்துசாமிதீட்சிதருக்கு கிடைத்த புனிதமான வீணை அவரது வழித்தோன்றல்களிடம் இருப்பதை கண்டுபிடித்ததற்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்