தேவர் சிலை தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல முக்கிய தீர்ப்புகளை இன்று (அக்டோபர் 26) வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் 13 கிலோ கொண்ட தங்க கவசம் அணிவிக்கப்படும். இந்த கவசம் தற்போது மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கிக் கணக்கில் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கட்சியின் பொருளாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் இந்த தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறும் அதிகாரத்தை பெற்று இருந்தார்.
தற்போது அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்த தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண் ஆஜராகி, “கழகத்தின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு அவர்தான் அனைத்து வங்கி கணக்குகளிலும் வரவு செலவுகளை கவனித்து வருகிறார். எனவே அவரிடம் தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
ஓ பன்னீர்செல்வம் தரப்பில், ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தங்க கவசம் வழங்கக்கூடாது” என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முத்துராமலிங்க தேவர் நினைவிடப் பொருளாளர் காந்தி மீனா தரப்பில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வங்கி தரப்பிலும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில், ”அதிமுக கட்சி விதிமுறைகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது தற்காலிக பொருளாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆகையால் தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இபிஎஸ் தரப்பில், ”அதிமுகவில் 2,190 உறுப்பினர்கள் இணைந்தே இடைக்கால பொதுச்செயலாளரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த தேர்வு செல்லும் என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது.
ஆகவே சட்டப்படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன் இந்த வழக்கில் அடுத்தடுத்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, “இந்த ஆண்டு தேவர் தங்க கவசத்தினை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு வழங்க நீதிமன்றம் மறுக்கிறது.
தேவர் தங்கக்கவசத்தை ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்
மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வங்கியிலிருந்து தங்கக்கவசத்தை எடுத்து வந்து தேவர் சிலைக்கு அணிவித்து மீண்டும் வங்கியில் பத்திரமாக வைக்கும் வரை ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும்.
அதேவேளையில் இந்த உத்தரவானது இந்த ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரியா
கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ விசாரிக்க முதல்வர் பரிந்துரை!
கோடநாடு வழக்கு: முதன்முறையாக ஊட்டிக்கு விரைந்த சிபிசிஐடி டிஜிபி!