வாக்குக்காக அண்ணாமலை இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பழனியில் கடந்த ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாடு ஆன்மீக மாநாடு மட்டுமல்ல தமிழர் பண்பாட்டு மாநாடு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த ஆண்டு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒரு மாநாடு நடத்தினார்கள். சரியாக ஒரு ஆண்டு கழித்து இந்த ஆண்டு முருகப் பெருமானுக்காக ஒரு மாநாடு நடத்தியிருக்கிறார்கள். பழனியில் பால் காவடி தூக்குவதற்கு பதிலாக இதுபோன்று ஒரு அரசியல் காமெடியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது தமிழ் பண்பாட்டுக்கான மாநாடு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழர் பண்பாடு என்றால் அது நம்முடைய மூன்று புலவர்கள் தான். திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூன்று பேர்தான்.
இவர்களை பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா?
திருவள்ளுவர் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்திற்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவை பற்றி கவலைப்படாமல் நீதி கோரும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார் என்று பெரியார் கூறியிருக்கிறார்.
தொல்காப்பியரை ஆரியக் கூலி என்றும் கம்பன் இன்றைய அரசியல்வாதி போன்றவர், முழு பொய்யன் என்றும் பெரியார் சொல்லியிருக்கிறார்.
பெரியார் வழியில் திராவிட மாடலை நடத்துவதாக சொல்லும் திமுக இன்று தமிழ் பண்பாடு என்ற வார்த்தையை உச்சரிக்கிறது. அப்படி ஒரு கேவலமான நாடகத்தை பழனி மண்ணில் நடத்தியிருக்கிறார்கள்.
முருகப்பெருமான் இந்த நாடகத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிட கூடாது” என்று கூறினார்.
அண்ணாமலையின் கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “அண்ணாமலை வாக்குக்காக பேசுகிறார். நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த காலம் முதலே இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன்சார்பில் துறை அமைச்சர் முன்முயற்சி எடுத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.
இந்த மாநாடு தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடாக அமைந்திருக்கிறது. இதில் அரசியல் செய்து தங்களை நிலைநிறுத்தி காப்பாற்றிக்கொள்ளலாம் என்று அண்ணாமலை போன்றவர்கள் முயற்சி எடுப்பார்களேயானால், அந்த முயற்சி தோல்வியில் முடியும்” என்று கூறினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு விசிக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் தீர்மானங்கள் இடம்பெற்றிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு, “கல்வி காவி மயமாவதை விசிக மட்டுமல்ல சிபிஐ, சிபிஎம் என யாரும் ஏற்கமாட்டார்கள். அது வேறு விஷயம். பொதுவாக, இந்த மாநாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
தீர்மானங்கள் அதுபோல இருக்குமானால் அது மறுபரிசீலனைக்கு உரியது” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை (ஆகஸ்ட் 27) அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 26) சந்தித்து வாழ்த்து தெரிவித்த முத்தரசன், அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சுங்கச் சாவடி கட்டண உயர்வு… மத்திய அரசுக்கு அன்புமணி, டிடிவி கண்டனம்!
“மாலிவுட்டில் மட்டும் தான் பெண்களுக்கு பிரச்சனையா?” – நடிகர் டொவினோ தாமஸ்