“முத்தமிழ் முருகன் மாநாடு மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தாது. அது சமூகத்தில் வகுப்புவாதத்தை மட்டுமே ஊக்குவிக்கும்” என ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24, 25 தேதிகளில் நடைபெற்றது.
பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் ஆன்மீக சொற்பொழிவுகள், நாட்டுபுற கலை, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதோடு முருகன் குறித்த 1300 ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இரண்டாம் நாளான நேற்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெற்றது.
இந்த நிலையில் விசிக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ரவிகுமார் ”கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
கல்வியில் இந்துத்துவ செயல்திட்டத்தை திணிக்கும் முயற்சி!
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்றும் இன்றும் (24-25) நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவற்றுள், 5 ஆவது தீர்மானமாக, “முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்,
8 ஆவது தீர்மானமாக, “விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும்,
12 ஆவது தீர்மானமாக, “முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.
இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.
மத மாநாடுகள் வகுப்புவாதத்தை மட்டுமே ஊக்குவிக்கும்!
மேலும் அவர், “மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தை அனைவரிடமும் புகுத்த வேண்டும் என்ற மாநில அரசின் சிறந்த நோக்கங்கள் இருந்தபோதிலும், உலகளாவிய மத மாநாடுகள் சமூகத்தில் வகுப்புவாதத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.
முத்தமிழ் முருகன் மாநாடு மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தாது. ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் தமிழ் கடவுள்களில் ஒருவராக இருக்கலாம், ஆனால் அவர் இந்து அடையாளத்துக்குள் நீண்ட காலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். அவர் ‘சமஸ்கிருதமயமாக்கப்பட்டவர்’.
முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.
அப்படி கோவில்களில் பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்” என ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்கிறது!
வாகை சூடிய வாழை… மூன்று நாள் வசூல் நிலவரம் என்ன?