தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்தார்.
இந்த நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் ’மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், 2024 – 25ஆம் ஆண்டில், 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள பணிகளும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில், முதற்கட்டமாக வரும் ஆண்டில் 2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், தமிழ்நாட்டிலுள்ள 2 இலட்சம் விவசாயிகள் பயனடைவர்.
2. மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட, ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3. நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் அமைத்து, தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
4. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் மண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, சமச்சீர் உரப் பரிந்துரை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
5. 2024 – 25 ஆம் ஆண்டில் 2,482 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் 2 இலட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண்பரிசோதனை செய்து மண்வள அட்டையும், மண்வள மேம்பாட்டிற்கான பரிந்துரையும் வழங்கப்படும்.
6. இரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்ணின் வளம் காக்க, 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், 37,500 எக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.
8. 2 இலட்சம் விவசாயிகளுக்கு 1௦0 இலட்சம் ஏக்கரில் இடுவதற்காக, 5 இலட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
9. வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
10. இயற்கையிலேயே உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளின் 50 இலட்சம் செடிகளைத் தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்து பரவலாக்கம் செய்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
11. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்ல சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் இரகங்கள், 2024 – 25 ஆம் ஆண்டில் மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, 2025 – 26 ஆம் ஆண்டில், 10,000 ஏக்கரில் சாசூபடி செய்யும் வகையில் 20௦ மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென, 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
12. வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்பட்டு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இதற்கென 38 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
13. 2023 – 2024.ஆம் ஆண்டில், 36 மாவட்டங்களில் 35,815 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்ட 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு இரண்டாம் ஆண்டிற்கான ஆதரவு வழங்கிட, 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
14. உயிர்ம வேளாண்மைக்கு இன்றியமையாத, பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்தக்கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள 100 குழுக்களுக்கு இயற்கை & இடுபொருள் தயாரித்தல் மையம் அமைத்து ஊக்குவிக்க, 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
15. 2024 – 25 ஆம் ஆண்டில் தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்திடவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால்களை வலுப்படுத்துவதற்காகவும் சிறிய பெரிய, உயர் தொழில்நுட்ப (ஹை-டெக்) நாற்றங்கால்கள் அமைப்பதற்கு வேளாண் காடுகள் திட்டத்தில், 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
16. 2024 – 2025 ஆம் ஆண்டில் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட, 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
17. மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இலாபகரமான பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக, உழவு மேற்கொள்ளவும், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட விதைகளும் வழங்கப்படும். வரும் ஆண்டில், மூன்று இலட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த, 36 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
18. வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழச்செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்கென 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
19. கன்னியாகுமரி மாவட்டத்தில், 3 கோடியே 6௦ இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும். இத்திட்டத்தில், தேன் பரிசோதனைக் கூடமும் தேன், தேன் சார்ந்த பொருட்களைப் பதப்படுத்தும் கூடங்களும் அமைக்கப்பட்டு, தேனீ வளர்ப்போர்க்கு உரிய பயிற்சிகளும் அளிக்கப்படும்.
20. தமிழ்நாட்டில் சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கி, தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பரவலாக்கம் செய்யப்படும். இதற்கென, ஒரு கோடியே 48 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
21. மண்ணின் வளத்தை மேம்படுத்திட பயிர்க்கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களை வேகமாகச் சிதைத்து கரிமச்சத்தின் அளவை உயர்த்தவும், கிடைக்காத நிலையிலுள்ள சத்துகள் கிடைக்கப் பெறவும், பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் செயல்திறனும் மதிப்பிடப்படும். இதற்கென, 1 கோடியே 39 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
22. தமிழ்நாடு முழுவதும் 100 உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேளாண் பட்ஜெட் : முதல்வர் பெயரில் புதிய திட்டம்… ரூ.206 கோடி ஒதுக்கீடு!