பள்ளிக்கு செல்லும் கிராமத்து ஏழை மாணவிகளைக் குறிவைத்து மூளைச்சலவை செய்து நகரங்களுக்கு அழைத்துச் சென்று பணக்கார முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அனுப்பி வைத்த கொடூரம் திருச்சி அருகே உள்ள முசிறியில் அரங்கேறியது.
இதுபற்றி, “பள்ளி மாணவிகளை பணக்காரர்களுக்கு விருந்து படைத்த கொடூரம்: மூடி மறைப்பது யார்?” என்ற தலைப்பில் விரிவான புலனாய்வு செய்தியாக பிப்ரவரி 6 ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.
முசிறி அருகே உள்ள பைத்தம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி பாதிக்கப்பட்டதை அறிந்த அவரது தாயார், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து விட்டுவிட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை திருச்சி ஹோமுக்கு அனுப்பிவிட்டனர்.
போக்சோ சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. இந்த அவலத்தை நமது மின்னம்பலம் இணைய இதழில் செய்தியாக வெளியிட்டோம்.
மின்னம்பலம் செய்தியை அதிமுக கையில் எடுத்து வருவதை, உணர்ந்த உளவுத் துறை உயர் அதிகாரிகளை அலர்ட் செய்தது. இதையடுத்து காவல்துறை தலைமை முசிறி சம்பவத்தை முழுமையாக விசாரணை செய்து அறிக்கை தருமாறும், நடவடிக்கை எடுக்குமாறும் திருச்சி சரக டிஐஜிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் தலைமையில் சிறப்பு டீம் அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் திருச்சி டிஐஜி. அதன்படி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான ஒரு டீம், எஸ்.பி தனிப் பிரிவு டீம், எஸ்பிசிஐடி, க்ரைம் டீம் என கிருஷ்ணாபுரம் பகுதியில் இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்கள்.
டிஎஸ்பி யாஸ்மின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், பாதிக்கப்பட்ட பெண் (நமது செய்தி வெளியான பிறகு ஹோமில் இருந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டார்) ஊரில் உள்ள மற்ற பள்ளி மாணவிகள் ஆகியோரை சந்தித்து விசாரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியும், தாயும் டிஎஸ்பி யாஸ்மினிடம் நடந்த சம்பவங்களை வாக்கு மூலமாக கொடுத்திருக்கிறார்கள். மேலும், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காவேரி தங்களிடம் மிரட்டலாகவும் கோபமாகவும் விசாரித்ததையும் சொல்லியுள்ளார்கள்.
முதல் கட்ட விசாரணைக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 12) டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் சென்ற போலீஸார், மாணவிகளை அழைத்துச் சென்று பணக்காரர்களிடம் விடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிருந்தா என்ற சுலக்சனா மற்றும் அவருக்கு நெருக்கமான ரங்கராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் வேகமாக விசாரித்து வரும் டிஎஸ்பி யாஸ்மினிடம் மின்னம்பலம் சார்பாக தொடர்புகொண்டு பேசினோம். “இந்த புகாரை நானே நேரடியாக விசாரித்து வருகிறேன். விசாரணையில் முதல் கட்டமாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம். இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
சிலரின் முயற்சியில் மூடி மறைக்கப்பட்ட முசிறி சம்பவத்தில் மின்னம்பலம் செய்தி காரணமாக காவல்துறை அதிகாரிகள் விசாரணையை வேகப்படுத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும் அம்புகளை கைது செய்துள்ள போலீஸ் முழுமையான விசாரணை நடத்தி, இந்த அம்புகளை ஏவியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்கள் முசிறி மக்கள்.
-வணங்காமுடி
தமிழக சாலை பணிகள் – கட்கரி சொன்னது என்ன? தயாநிதி மாறன் பேட்டி!
திருவண்ணாமலைக் காரர்களும் இடைத் தேர்தலும்: எ.வ.வேலுவை புகழ்ந்த துரைமுருகன்
Comments are closed.