தமிழ்நாட்டின் 50வது மற்றும் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் இன்று (ஆகஸ்ட் 19) நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிவ்தாஸ் மீனா பதவி வகித்து வந்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா முடிந்த சில நிமிடங்களில் அவர் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் பெற்றார்.
அதனையடுத்து அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், “முதல்வரின் (எஸ் 1) முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தான் அடுத்த தலைமை செயலாளராகிறார் என தலைமை செயலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டதாக நேற்று நமது மின்னம்பலம்.காம்-ல் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே தமிழ்நாட்டின் 50வது மற்றும் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை தனது பதவியையும் ஏற்றுள்ளார்.
யார் இந்த முருகானந்தம் ஐஏஎஸ்?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னனு பொறியியல் பட்டம் பெற்ற இவர், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ முடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிதித்துறை, தொழில்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரது பங்கு முக்கியமாக பார்க்கப்பட்டது.
முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். தனது செயல்பாடுகள் மூலம் முதல்வர் ஸ்டாலினின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற நிலையில் இன்று புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிமான்ட்டி காலனி-3 எப்போது?: இயக்குநர் பதில்!
”7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது” : DTE எச்சரிக்கை!