கேரளாவில் பாஜக பிரமுகரை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கி மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 30) தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த வழக்கறிஞரான ரஞ்சித் சீனிவாசன் மாநில பாஜகவில் ஒபிசி அணி தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ரஞ்சித் சீனிவாசன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
கேரளாவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சஃபரூதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி பூவத்துங்கல் மற்றும் ஷெர்னாஸ் அஷ்ரப் ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் எஸ்டிபிஐ மற்றும் தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கின் விசாரணையானது ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரில் 12 பேர் நேரடியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் மூன்று பேர் வெளியில் இருந்து உதவி செய்ததாகவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் குற்றவாளிகளான 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரே வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
போராட்டத்தில் இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது!
உலக பணக்காரப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்… இந்தியர்களின் நிலை என்ன?