பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் : முக்கிய குற்றவாளி கைது!

Published On:

| By christopher

திருவாரூரில் பாஜக பிரமுகர் மதுசூதனனை அரிவாளால் தாக்கிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் இன்று (மே 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவர் திருவாரூர் பாஜக விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு தனது வீட்டில் இருந்த மதுசூதனனை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மதுசூதனன் மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் உட்பட 6 பேர் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. மேலும் பாஸ்கர் உத்தரவின்பேரில், பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் கூலிப்படையை ஏவி, மதுசூதனனை வெட்டியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்த போலீஸார் குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல கூடாது : சிபிஐ கடும் வாதம்!

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel