கோபாலபுரம் இல்லத்திலிருந்து முரசொலி செல்வம் உடல் இன்று (அக்டோபர் 11) மாலை 4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
கலைஞர் மருமகனும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று காலை, பெங்களூருவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 84.
பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முரசொலி செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.
தொடர்ந்து அவரது குடும்பத்தினர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும், திமுக நிர்வாகிகளும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகர்கள் சத்யராஜ், பிரசாந்த், பாஜக பிரமுகர்கள் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திமுக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுவந்து முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு, கோபாலபுரம் இல்லத்திலிருந்து முரசொலி செல்வம் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சிதம்பரம் கோயில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? : மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கேள்வி!
மாநிலங்களுக்கான வரி பகிர்வு: தமிழ்நாட்டைவிட நான்கரை மடங்கு அதிகம் பெற்ற உ.பி!