சிந்தனைச் சிலந்தி.. ஸ்டாலின் மனசாட்சி… யார் இந்த முரசொலி செல்வம்?

Published On:

| By Minnambalam Login1

murasoli selvam dies

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக நீண்ட நாட்கள் பணியாற்றியவரும், திராவிட இயக்க எழுத்தாளருமான, எல்லார்க்கும் இனியவர் முரசொலி செல்வம் அக்டோபர் 10 காலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமாகிவிட்டார்.

பெயரிட்ட கலைஞர்

தனது அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் இரண்டாவது மகனுக்கு பன்னீர் செல்வம் என்று பெயரிட்டார் தாய்மாமனான கலைஞர். அப்போது திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியான ஏ.டி.பன்னீர்செல்வத்தின் நினைவாகவே அந்த பெயரை தனது, ‘மருமகனுக்கு’இட்டார் கலைஞர்.

கலைஞரால் பெயரிடப்பட்டதாலோ என்னவோ நாட்டு நடப்பு, எழுத்து, அரசியல் ஆகியவற்றில் பன்னீர்செல்வத்துக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. தனது தாய்மாமன் கலைஞருடனேயே எங்கும் சென்று வருவார். அப்போது அண்ணாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் என்ற பெயரை, ‘செல்வா… செல்வா…’ என்று சுருக்கி அழைத்தார் அண்ணா.

1967 இல் முரசொலி ஆசிரியராக இருந்த கலைஞர், அமைச்சரானதால், முரசொலி ஆசிரியர் பொறுப்புக்கு மாறனை நியமித்தார். அதனால் அவர் முரசொலி மாறன் ஆனார். அப்போதே முரசொலி அலுவலகத்துக்கு சென்று அங்கே தினம் தினம் நடக்கும் வேலைகளை அறிந்துகொள்வதிலும்,. கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாக இருப்பார் செல்வம்.

ஆசிரியர் பொறுப்பு

1989 இல் முரசொலி மாறன் மத்தியிலே அமைந்த வி.பி.சிங் அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றார். அப்போது முரசொலி ஆசிரியர் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்ற கேள்வி வந்தபோது… கலைஞர்தான், ‘செல்வத்தை நியமித்தார். அப்போதிலிருந்து முரசொலி செல்வம் ஆனார்.

ஜெயலலிதா ஆட்சியில் முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் அதன் ஆசிரியரை சட்டமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார் பேரவைத் தலைவர். முரசொலியின் ஆசிரியரான முரசொலி செல்வம் சட்டமன்றத்தில் ஆஜரானார். அவரை விசாரிப்பதற்காகவே சட்டமன்றத்தில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது.

அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், துணிந்து வாதாடி, அடக்குமுறைக் கூண்டைத் தகர்த்தார். முரசொலி செல்வத்தின் துணிச்சலைப் பாராட்டி, ‘கூண்டு கண்டேன்- குதூகலம் கொண்டேன்’ என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் எழுதினார் கலைஞர்.

1989 இல் இருந்து 2024 அக்டோபர் 10 ஆம் தேதி பெங்களூருவில் இறுதி மூச்சு விடும் வரை அவரது சொல்,செயல், சிந்தனை எல்லாவற்றிலும் முரசொலியே இருந்தது.

கொஞ்ச நாள் பெங்களூரு, கொஞ்ச நாள் சென்னை என இருக்கும் வழக்கம் கொண்டவர் முரசொலி செல்வம். சமீப நாட்களாக பெங்களூருவில் இருக்கும் தனது இல்லத்தில் தங்கியிருந்தார். அவருடன் உதவியாளர் மட்டுமே இருந்தார்.

சென்னையில் இருந்தாலும் பெங்களூருவில் இருந்தாலும் வேறு எங்கு சென்றாலும்… மறுநாள் முரசொலியில் என்ன வரவேண்டும், யாருக்கு பதில் எழுத வேண்டும் என்றுதான் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருப்பார். அப்படித்தான் நேற்று இரவு முரசொலிக்கு எழுதுவதற்காக சில குறிப்புகளை தயார் செய்துவிட்டு உறங்கியிருக்கிறார்.

கடைசி நிமிடங்கள்…

இன்று காலை 6.30 மணியளவில் எழுந்த முரசொலி செல்வம், பல் தேய்த்துவிட்டு வழக்கத்துக்கு மாறாக மீண்டும் படுக்கையில் படுத்திருக்கிறார். வழக்கமாக பிரஷ் செய்தவுடன் செய்தித் தாள்களை படிக்கும் பழக்கம் கொண்ட முரசொலி செல்வம், இன்று ஏதோ அசௌகரியமாக உணர்ந்ததால் மீண்டும் படுத்துக் கொண்டு போர்வையால் தன் முகத்தையும் மூடிவிட்டார்.

7.30 கடந்தும் எழுந்திருக்காத நிலையில்…ஆச்சரியப்பட்ட உதவியாளர் வந்து எழுப்பியபோதுதான் அப்படியே நிரந்தர ஓய்வுக்குப் போய்விட்டார் முரசொலி செல்வம் என்பது தெரியவந்திருக்கிறது.

உடனடியாக சென்னையில் இருக்கும் அவரது மனைவி செல்விக்கும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டாலினுடைய மனசாட்சி!

கலைஞரின் மனசாட்சியாக முரசொலி மாறன் இருந்ததைப் போல, முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக இருந்தவர் முரசொலி செல்வம். ஒவ்வொரு நெருக்கடியான நிலையின் போதும் முரசொலி செல்வத்திடம்தான் ஸ்டாலின் ஆலோசனை கேட்பார்.

4 பேர், மேடை மற்றும் மருத்துவமனை படமாக இருக்கக்கூடும்

 

அண்ணாவுடன், கலைஞருடன் பழகிய நீண்ட நெடிய பழக்கம், அப்போது நெருக்கடியான தருணங்களில் அவர்கள் எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் என நீண்ட அனுபவம் கொண்டவர் முரசொலி செல்வம். அதனால் இதேபோன்ற நெருக்கடிகள் அன்று வந்தபோது அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதை நினைவுகூர்ந்து, இப்போது எப்படி முடிவெடுக்கலாம் என்பது பற்றியும் ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் சொல்லுவார் முரசொலி செல்வம்.

எந்த விஷயத்தை எப்படிப்பட்ட சூழலில் சொல்ல வேண்டுமென்று அறிந்து, மிக சீரியசான விஷயத்தைக் கூட அமைதியாக மென்மையாக எடுத்துரைத்து அதற்கான தீர்வையும் எடுத்துச் சொல்லுவார்.

ஆதாரங்கள், தரவுகள், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் முரசொலி செல்வம் கொடுக்கும் ஆலோசனைகள் ஸ்டாலினுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கின்றன.

“கலைஞருக்குப் பின் சாயும் கடைசி தோள்..” முதல்வர் ஸ்டாலினின் நினைவேந்தல்  

இதை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நினைவேந்தல் செய்தியிலேயே பகிர்ந்திருக்கிறார்.

“சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை – கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கேடயமும் ஆயுதமும்

முரசொலி என்பது வெறும் இதழல்ல, இயக்கம் என்றவர் கலைஞர். திமுகவுக்கு எதிராக அவதூறுகளுக்கு முரசொலியில் கலைஞர் எழுதும் பதில்கள் வெறும் எழுத்தாக நின்றுவிடுவதில்லை… ஆயிரக்கணக்கான பேச்சாளர்கள் அதை மேடையில் ஒலிப்பார்கள்.

அதேபோல முரசொலி செல்வமும் முரசொலியில் எழுதும் கட்டுரைகள் தொடர்கள் திமுகவுக்கு எதிரான ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு பெரும் சம்மட்டி அடியாய் இருந்திருக்கிறது.

சர்க்காரியா கமிஷன் பற்றி முரசொலியில் தொடர் எழுதினார் முரசொலி செல்வம். திமுவை பற்றியும், கலைஞரை பற்றியும் இன்றைக்கும் எதிர்க்கட்சிகளின் நிரந்தர விமர்சனப்பட்டியலில் ஒன்றாக சர்க்காரியா கமிஷன் என்ற வார்த்தை இருக்கும்.

ஆனால் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது அது நடத்திய விசாரணையில், கலைஞர் மீது புகார் சொல்லி அந்த கமிஷனை அமைக்க வற்புறுத்திய எம்.ஜி.ஆர். கடைசி வரை கமிஷன் முன்பு ஆஜராகவே இல்லை என்ற தகவல் முரசொலி செல்வத்தின் கட்டுரை மூலமாகத்தான் பல திமுகவினருக்கே தெரியும்.

இவ்வாறு திமுகவுக்கு பல கேடயங்களையும், ஆயுதங்களையும் தன் அனுபவ எழுத்தின் மூலம் தந்தவர் முரசொலி செல்வம்.

சிந்தனைச் சிலந்தி

சிலந்தி பெயரில் முரசொலி ஏட்டில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார் முரசொலி செல்வம். திமுகவுக்கு எதிரான விமர்சனங்கள், கலைஞர், ஸ்டாலின், உதயநிதிக்கு எதிரான விமர்சனங்கள் அத்தனைக்கும் எள்ளலும் தரவுகளும் நிறைந்து. எதிரிகள் கூட ரசிக்கும்படி இருக்கும் அவரது விமர்சனம். நடை இனிமையாக இருந்தாலும் அவரது எழுத்து என்னும் கணை மிகக் கூர்மையாகவே இருக்கும்.

பழகுவதற்கு மிக இனிமையானவர் முரசொலி செல்வம். யாருடனும் எப்போதும் சிறு கோபத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார். ‘ஏன் சார் அவங்க மேல நாம கோவிச்சுக்கணும்… இன்னிக்கு இல்லைன்னாலும் நாளைக்கு அவங்க நம்ம நண்பராக ஆகிடுவாங்க…’ என்று பாசிட்டிவ் சிந்தனைகளை பரப்பி வந்தவர் முரசொலி செல்வம்.

அக்டோபர் 8 ஆம் தேதி கூட முரசொலியில், ‘அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம். சனாதனத்தில் வேறுபாடு கிடையாது’ என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முழு பக்க கட்டுரையை சிலந்தியாய் சீறியிருந்தார் முரசொலி செல்வம்.

இன்று அக்டோபர் 10 ஆம் தேதி முரசொலியில், உதயநிதி டி ஷர்ட் அணிந்து, அதில் திமுக சின்னத்தையும் பொறித்துக் கொண்டு அரசு விழாக்களுக்கு வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு… குட்டியாக ஒரு பெட்டிச் செய்தி போட்டு சூடு வைத்திருந்தார் முரசொலி செல்வம்.

“அரசு நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க. சின்னம் பொறித்த ‘டி ஷர்ட்’ அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டு மரபு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?” என்ற கேள்வியை எழுப்பி…

“கருப்பு, வெள்ளை, சிகப்பு பார்டர் பொறித்த கட்சிச் சின்ன கரை வேட்டிகளை அணிந்து அவருடைய கட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை முதலமைச்சர்களாக பல அரசு விழாக்களில் கலந்துகொண்டதும் மரபு மீறலா? உ.பி.யில் காவி உடையிலேயே ஒரு முதல்வர் உலா வருகிறாரே; அது எத்தகையச் செயல்? விளக்குவாரா ஜெயக்குமார்?” என்று எம்.ஜி.ஆர் முதல் யோகி ஆதித்யநாத் வரை இழுத்து வந்து கூண்டில் ஏற்றினார் முரசொலி செல்வம்.

 

முரசொலியில் தான் பயணித்த பல ஆண்டு அனுபவத்தை வைத்து, ‘முரசொலி சில நினைவலைகள்’ என்ற கட்டுரைத் தொடரை முரசொலியிலே எழுதியிருக்கிறார் முரசொலி செல்வம். அது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

 

அதற்கான அணிந்துரையில் முதல்வர் ஸ்டாலின், “திரு. செல்வம் அவர்கள், ‘முரசொலி நினைவலைகள் போல கலைஞரின் நினைவலைகள், கழகத்தின் நினைவலைகளையும் எழுத வேண்டும். அனுபவப் பாடத்தை விட சிறந்த பாடம் இருக்க முடியாது” என்று ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.

ஸ்டாலினுக்கு பல்வேறு ஆலோசனைகள் கொடுத்த முரசொலி செல்வம்,  தனக்கு ஸ்டாலின் கொடுத்த இந்த ஆலோசனையை நிறைவேற்றாமலேயே சென்றுவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

-ஆரா

ஆளுநருடன் மோதல் போக்கு தேவையில்லை : உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி!

”முரசொலி செல்வம் மறைவு செய்தி கேட்டு திடுக்கிட்டு போனேன்” : வைகோ

ஐயகோ சாய்ந்தனையோ ஆலமரமே !?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel