மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (அக்டோபர் 11) தகனம் செய்யப்பட்டது.
கலைஞரின் மருமகனும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று (அக்டோபர் 10) காலை பெங்களூருவில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் இருந்து எடுத்துவரப்பட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முரசொலி செல்வம் உடலை பார்த்த முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கதறி அழுதார். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் முரசொலி செல்வம் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கூட்டணி கட்சி தலைவர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முரசொலி செல்வம் மறைவை ஒட்டி மூன்று நாட்கள் திமுக கட்சியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகர்கள் சத்யராஜ், பிரசாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக முரசொலி செல்வத்தின் உடலை கட்டியணைத்து கதறி அழுதார் அவரது மனைவி செல்வி. அவருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறி தேற்றினார்.
பின்னர், மாலை 4.45 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து முரசொலி செல்வம் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முரசொலி செல்வத்தின் மறைவு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காளிதாஸ் ஜெயராமின் வருங்கால மனைவி… யார் அந்த மாடல்?
‘வேட்டையன்’ படத்திற்கு கடம்பூர் ராஜூ எதிர்ப்பு!