முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனசாட்சி என்று அழைக்கப்பட்ட முரசொலி மாறனின் 89ஆவது பிறந்த தினம் இன்று. இதையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, மா.சுப்பிரமணியன், வெள்ளக்கோயில் சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ். பாரதி, தயாநிதி மாறன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், அண்ணா நகர் மோகன், எழிலன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முரசொலி மாறன், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், சண்முகசுந்தரம் – சண்முகசுந்தரி தம்பதிக்கு மகனாக 1934 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் தியாகராஜ சுந்தரம். சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் பட்டம் பெற்ற இவர், தன் தாய் மாமாவான, கலைஞரின் ‘முரசொலி’ பத்திரிகையில், ‘மாறன்’ என்ற புனை பெயரில் எழுதினார். திரைத்துறையில் நுழைந்த போது, அங்கு மாறன் என்பவர் இருந்ததால், ‘முரசொலி மாறன்’ என்றழைக்கப்பட்டார். அண்ணா முதல்வரான பின், தென்சென்னை தொகுதி எம்.பி.யானார் முரசொலி மாறன். வி.பி.சிங், வாஜ்பாய் அரசுகளில் மத்திய அமைச்சராக இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2003 நவம்பர் 23ஆம் தேதி 69வது வயதில் காலமானார்.
கலை.ரா