ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆண்மை குறித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நாளேடான முரசொலி இன்று (பிப்ரவரி 20) பதிலடி கொடுத்து இருக்கிறது.
முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், எடப்பாடி பழனிச்சாமியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்ததோடு, அடுக்கடுக்கான கேள்விகளையும் முன் வைத்துள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆண்மை ஆராய்ச்சி செய்யும் ஆட்களின் வரிசையில் ஒருவர் இப்போது இணைந்து இருக்கிறார்.
அவர் ஈரோட்டில் ரோட்டில் நின்று கொண்டு ஆண்மை இருக்கிறதா?’ என்று தெருவைப் பார்த்துக் கேட்கிறார்.
இவ்வளவு ஆத்திரம் ஒருவருக்கு வருவானேன்? ஈரோடு கிழக்கில் தோற்றுப் போகப் போகிறோம் என்ற பயமா?
பொதுக்குழுவே செல்லாது. அது பொதுக்குழுவே அல்ல. அது கட்சியே அல்ல என்கிற அளவுக்கு உடலுறுப்பின் அத்தனை பாகமும் அழுகிக் கிடக்கும் கட்சிக்கு உதடு மட்டுமே ஒழுங்காக இருக்கிறது. அதை வைத்து உளறிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்.
கட்சியில் நான்கு பேரை கப்பம் கட்டுவதற்காக வைத்திருந்தார் ஜெயலலிதா. சொறி, சிரங்கு, படை, தேமல் என்று அ.தி.மு.க. பெண் அமைச்சர் ஒருவரே அப்போது கமெண்ட் அடிப்பார். அந்த நால்வரில் ஒருவராக இருந்தவர் இவர்.
டேபிளுக்கு கீழே போய், ஊர்ந்து போய் காலைத் தேடி மீசையில் மட்டுமல்ல – வேட்டி யிலும் கூவத்தூர் அழுக்கு பட உருண்டு போய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்க்கு மீசை இருந்தால் என்ன? வேட்டி விலகினால் என்ன? சட்டை கிழிந்தால் என்ன?
டயர் நக்கிகள் என்று அன்புமணி ராமதாஸ் சொன்ன போது இவர்களுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு தைலாபுரம் தோட்டத்தில் தலைவாழை இலை போட்டுச் சாப்பிட்ட போது இந்த சவடால்தனம் எங்கே போனது?
ஏன் அப்போது நாக்கு எழவில்லை? மீசை தொங்கியது ஏன்? வேட்டியை கக்கத்தில் சுருட்டி வைத்துக் கொண்டு சாப்பிட்டார்களே?
தலைமைச் செயலகத்தில் ரெய்டு விடும் போது வேட்டி இடுப்பில் இருந்ததா இல்லையா? விஜயபாஸ்கர் வீட்டில் விசாரணை நடந்தபோது பேண்ட் போட்டிருந்தார்களா?
‘சிலரிடம்’ தெருவில் சண்டை போடக் கூடாது என்பார்கள். அதனால்தான் அவரது பெயர் இங்கு பயன்படுத்தப்படவில்லை” என குறிப்பிட்டு கடுமையாக முரசொலியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா