துயர சம்பவத்திலும் ஆளுநர் விளம்பரம் தேடுவதாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி கையிலெடுத்து இன்று (மே 19) விசாரணையை தொடங்கியிருக்கிறது.
இதனிடையே கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமை செயலாளர் இறையன்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து நீண்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார் ஆளுநர். விஷ சாராய உயிரிழப்பில் அறிக்கை கேட்டது தவறு இல்லை. கேட்ட விதம் தான் தவறு.
நடந்தவை குறித்து முழு விவரங்களை மூத்த அதிகாரியை நேரிலோ , தொலை பேசியிலோ அழைத்து ஆளுநர் அறிந்து கொள்ள முடியும். என்றாலும் அப்படி செய்யாது ஒரு அறிக்கையாக வெளியிட்டு அதனை ஊடகங்களுக்கு அனுப்பி, நான் ஏதோ பெரிய செயலை செய்துவிட்டதாக எண்ணும் சிறுப்பிள்ளைத்தனம் தான், ஆளுநரின் நெஞ்சம் எல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
இந்த கேள்விகளை அரசிடம் எழுப்பும் முன் பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் (2022), உத்தரப் பிரதேசம்(2019), மத்தியப் பிரதேசம்(2021), போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத் தனத்தோடு ஆளும் பாஜக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா?- என்பதையாவது கேட்டறிந்திருக்க வேண்டாமா?
இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டிக் கொள்ள ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். விபரம் தெரியாத நாலாம்தர அரசியல்வாதிபோல கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்.
ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார். இதுபோன்று 2 ஆயிரம் பேரை ஏன் கைது செய்ய வேண்டும் என குஜராத் ஆளுநருக்கு ஒரு தொலைபேசி போட்டு கேட்டிருந்தால் விளக்கி இருப்பார்.
2022 ஆம் ஆண்டில் மது விலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு 42 பேர் உயிரிழந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக 2500 பேரை கைது செய்திருப்பதாகவும், ஏறத்தாழ 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தை கைப்பற்றியதாகவும் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வந்துள்ளதை ஆளுநர் ரவி அறிந்தேயிருப்பார். ஏனென்றால் அவர் மெத்த தெரிந்த மேதாவி.
மதுவிலக்கு அமுலில் இருக்கும் மாநிலத்தில், அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில் இவ்வளவு பேரை அதாவது 2500 பேரை கைது செய்ய அவசியம் ஏன் ஏற்பட்டது” – என்று கேள்வி கேட்டு அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி கடிதம் எழுதி அதனை ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத் தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம்.
அதைவிடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது” என்று விமர்சித்துள்ளது.
மேலும் ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியதை சுட்டிக்காட்டி, “ஒருமுறை சூடுபட்ட பூனை கூட மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கும்.
ஆனால் ரவி, தான் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடாது, எப்போதும் சிறு பிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.
பிரியா
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல்துறையில் பணி!
