“தமிழிசை பூச்சாண்டி இங்கு எடுபடாது” – முரசொலி பதில்

Published On:

| By Selvam

தெலங்கானா ஆளுநர் தமிழிசை முரசொலியில் வெளியான சிலந்தி கட்டுரையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தெலங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை, அங்கு காட்ட முடியாததால் சிலந்தியிடம் காட்டி பார்க்கிறார் தமிழிசை என்று முரசொலி பதிலளித்துள்ளது.

நவம்பர் 5-ஆம் தேதி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற தலைப்பில் சிலந்தி கட்டுரை வெளியானது.

அந்தக் கட்டுரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது.

murasoli condemn telangana governor tamilisai

முரசொலியில் வெளியான கட்டுரைக்கு தமிழிசை நேற்று காட்டமான பதிலடி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “தெலங்கானாவில் என்ன நடக்கிறது என்று முழுமையாக தெரிந்து கொண்டு முரசொலியில் எழுத வேண்டும். தெலுங்கை பூர்விகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி, தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்க செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

என்னை தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது யார்? அந்நியர் நீங்களா? நானா? “என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

நேற்று மின்னம்பலம் இணையதளத்தில் தமிழிசை – முரசொலி தகிக்கும் மோதல் என்ற தலைப்பில் வெளியான செய்தியில், ஆளுநர் தமிழிசையின் விமர்சனத்திற்கு இன்று முரசொலியில் கட்டுரை வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

murasoli condemn telangana governor tamilisai

இந்தநிலையில் ஆளுநர் தமிழிசையின் விமர்சனத்திற்கு முரசொலி நாளிதழில் சிலந்தி பதில்கள் என்ற தலைப்பில், பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ”தன்னைப் பற்றி அதீதமான கற்பனையில் தமிழிசை மிதக்கிறார். எதிர்ப்பைக் கண்டதும் ஓட்டுக்குள் பதுங்கிடும் நத்தை, அந்த ஓடு இமயமலை போன்றது என எண்ணிக் கொள்ளும். தமிழிசை பதில் அந்த ரகத்தை சேர்ந்தது தான். மடுக்கள் தங்களை மலையாக கருதலாம். மக்களுக்கு தெரியாதா மலை எது? மடு எது? என்பது.

தெலங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை, அங்கு காட்ட முடியாததால் சிலந்தியிடம் காட்டி பார்க்கிறார். இந்தப் பூச்சாண்டி அல்ல. இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள். இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது” என்று முரசொலி தெரிவித்துள்ளது.

ஆளுநர் தமிழிசை, முரசொலி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது அரசியல் அரங்கில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகிறது.

செல்வம்

கமலுக்கு பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாத்திரத்துக்குள் சிக்கிய குழந்தையின் தலை: பெற்றோரே உஷார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share