கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை அமைதி காத்துவந்த ஆளும் கட்சியான திமுக, தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இச்சம்பவம் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதே அரசியல் சக்திகள் தான் என தமிழக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல் என பேசியது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கார் வெடிப்பில் உயிரிழந்த முபினின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களின் அளவு தொடங்கி, அவரது கடைசி வாட்ஸப் ஸ்டேட்டஸ் வரை செய்தியாளர்கள் மத்தியில் தகவல்களை கொட்டிய அண்ணாமலை, வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கை என்.ஐ.ஏ.விசாரணைக்கு பரிந்துரைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதோடு, கோவையில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
கோவை கார் வெடிப்பு நடந்து 4 நாட்களுக்குப் பிறகு முரசொலியில் இச்சம்பவம் தொடர்பாக தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டது வரையிலான நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன.
23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு நிகழ்ந்த நிலையில் உயிரிழந்த ஜமேஷா முபினின் அடையாளத்தை போலீஸ் உடனடியாகக் கண்டுபிடித்தனர். அவர் பயணம் செய்த கார் 10 பேரின் கைகளுக்கு மாறியதை 10 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், உடனடியாக ஜமேஷா முபீனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வெடி பொருட்களும் ரகசிய டைரியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 5 பேரும் 24-ம் தேதியே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கார் வெடிப்பு நடக்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான், அங்கு இருந்த கோவிலில் காவல் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டதையும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் இந்த துரிதமான செயல்பாடுகளால் தான் தீபாவளி அன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை தொடங்கியதை வரவேற்று பதிவிட்டிருந்தார். ஆனால் தீபாவளி முடிந்ததும் அவருக்குள் அடங்கி இருந்தது எல்லாம் வெளியில் வந்து அவதூறுகளை அள்ளி தெளித்து வருகிறார்.

இது போன்ற சம்பவங்களில் காவல்துறையின் விசாரணை தகவல்களை உடனடியாக வெளியிட முடியாது என்பதை முன்னாள் காவல்துறை அதிகாரியான அவர் அறிந்து இருந்தாலும், ஆதாயம் தேடும் அவரது துடிப்பு மட்டுமே அவரது பேட்டிகள் மூலம் வெளியில் தெரிகிறது.
கோவையை கலவர பூமியாக இருக்கிறது என்று பேட்டி அளிப்பதன் மூலம் மக்களை பீதிக்குள்ளாக்கும் காரியங்களை தமிழக பா.ஜ.க. செய்கிறது.
பொதுமக்களை அச்சமற்ற வகையில் காக்கும் கடமையை காவல்துறை செய்யும் போது, மக்களை அரசியல் சக்திகள் அச்சத்துக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அமைதிச்சூழலை உருவாக்க தமிழக காவல்துறை நாளும் உழைத்துவருவதாகவும் வார்த்தை வெடிகளை வைப்பதை சிலர் நிறுத்தினாலே போதும் என்றும் தமிழக பா.ஜ.க.வை விமர்சித்துள்ளது முரசொலி.
அப்துல் ராஃபிக்