முர் அலி 1 – முரளி சண்முகவேலன்

அரசியல் சிறப்புக் கட்டுரை

முரளி சண்முகவேலன்

வோர்சாவில் (உள்ளூர்காரர்களுக்கு ‘வார்சாவியா’) சமீபத்தில் ஒரு கருத்தரங்கத்துக்காகச் செல்ல நேரிட்டது. ‘வளரும் நாடுகளில் அலைபேசியினால் பெண்களுக்கு ஏற்படுகின்ற சமூக / அரசியல் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் பிரச்னைகள்’ கருத்தரங்கம் வார நடுவில் முடிந்தவுடன் எஞ்சியுள்ள வார நாட்களை வோர்சாவில் செலவிட முடிவு செய்தேன். நிற்க. எனக்குப் பிடித்த உணவுகளில் ஒன்றான, பன்றிக் கணு (knuckle) ரோஸ்ட் போலந்தில் பிரசித்தம். வோர்சா உணவு விடுதிகளில் நான் அந்த ரோஸ்ட் வேண்டும் என விரும்பிக் கேட்டபோது நல்லெண்ணம் படைத்த சிப்பந்திகள் ‘நீங்கள் கேட்கும் உணவு பன்றி இறைச்சி என்பது தெரியும்தானே?’ என பரிவுடன் நினைவூட்டினர்.

சமீப காலமாக பழுப்பு (brown) நிறத்தினர் அனைவரும் முஸ்லிம்கள் என்ற மனப்பான்மை ஐரோப்பியர்களின் மனதில் வளர்ந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகளும் மிகவும் ஆச்சர்யத்துடன் ‘பரவாயில்லையே…’ என்பது போல் பார்த்தனர். பிறகு அம்மணி வாய்விட்டு ‘நீங்கள்… எப்படி பன்றி இறைச்சி… அது உங்கள் மதத்தினருக்கு தடையல்லவா?!’ என்று ஆச்சர்யப்பட்டார்.

எனது வாழ்க்கைத் துணைவியார் (வெள்ளைக்காரர்), சுவை பிடிக்காததால் பன்றி இறைச்சி உண்பது கிடையாது. ஒவ்வொரு முறையும் ஐரோப்பிய உணவு விடுதியில் பன்றி இறைச்சி வேண்டாம் என்று அவர் சொல்லும்போது உணவகச் சிப்பந்தி, உடன் இருக்கும் என்னை ஒரு முறை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு, துணைவியாரை சிநேகத்துடன் – எனக்காக அவர் தனது பன்றி உணவினை தியாகம் செய்வதை – மெச்சுவது இப்போது பழகி விட்டது. மற்றொரு முறை நட்பு மனம் படைத்த ஒரு ஐரோப்பிய உணவகச் சிப்பந்தி என் பெயரைக் கேட்டுவிட்டு அதிகக் குழப்பமடைந்தார். காரணம், ‘முர் அலி’ எப்படி பன்றி இறைச்சி சாப்பிடுகிறார் என்பதே.

இந்த முர் அலி குழப்பம் எகிப்தில் ஒரு சகோதரரை உணர்ச்சிவசப்பட வைத்தது. 2010 கிறிஸ்துமஸின்போது கெய்ரோ விமான நிலையத்தில் சுங்கச் சோதனை செய்து கொண்டிருந்த ஒரு நுபிய (எகிப்திலுள்ள ஒரு இனக்குழு) நண்பர் அவரது மொழியில் என்னிடம் பேச, அதற்கு நான் ஆங்கிலத்தில் ‘எனக்கு நீங்கள் கூறுவது புரியவில்லை’ என பதில் சொன்னேன். அப்போது எனது தலைக்கேசம் இப்போதைவிட அதிகமான சுருளோடு இருந்தது. நுபியர்கள் சுருள்முடி மன்னர்கள். துணைவியார்கூட இருந்தார். எனது மண்ணின் கலாச்சார அடையாளங்களை வெள்ளை ஏகாபதியத்துக்கு அடகுவைத்து நுபிய இனத்தின் கருங்காலியாகி விட்டதற்கு அச்சகோதரர் வருத்தப்பட்டார்.

 

சில சமயங்களில், “வால்லா, நம்ம ஆளுதான்… முர் அலி” என்றும் நட்புடன் தோள் தட்டப்பட்டிருக்கிறேன். முர் அலி முள்ளெலியாகாத வரையில் எனக்கொன்றும் பிரச்னையில்லை. பத்து வருடங்களுக்கு முன் செக் தலைநகரான ப்ராக்கிலிருந்து தென் பொஹெமீயாவுக்குக் காரில் சென்றபோது, வழியில் ரோட்டுப்பக்கம் உள்ள உணவகத்தில் எனது நண்பனும் உள்ளூர்வாசியுமான டேவிட்டும், நானும் சாப்பிடச் சென்றோம். பழுப்பு நிறத்தில் ஒரு ‘முர் அலி’யைக் கண்டதும் அந்த உணவகத்தில் இருந்தவர்கள் சட்டென ஒரு உறைந்த நிலையை அடைந்து, பிறகு சுதாரித்துக் கொண்டனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஐரோப்பிய பெருநகரங்களை விட்டு வெளி வந்தோமானால், பெரும்பாலான ஐரோப்பியர்கள் சிறிய நகரங்களில் வாழும் உள்ளூர்வாசிகள் (provincial) இதை ஒரு குறையாக சொல்லவில்லை. ஆனால், நம்மவர்கள் அடிக்கடி கிளப்பிவிடும் ‘ஐரோப்பியக் கண்டமானது சமூக மறுமலர்ச்சிச் சிந்தனைகளான மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு அல்லது நாத்திகம் பேசும் சோசியலிஸ்டுகள் நிறைந்த ஒரு பொது அறிவுத்தளம்’ என்ற படத்துடன் நாம் எடை போடுவதை நிறுத்திக்கொள்வது நல்லது.

ஐரோப்பிய பெருமைகூட கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து வருகிறது என்றே நான் சொல்வேன். இதன் பொருள், ஐரோப்பிய சிந்தனைகளும் ஐரோப்பிய யூனியனும் மரணப்படுக்கையில் இறுதிமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்று பொருளல்ல. பொருளாதாரம், வெளி இனத்தவரின் குடியேற்றம், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிற அகதிகளின் பிரச்னை, இஸ்லாம் போன்ற அரசியல் பொருள்கள், நவீன ஐரோப்பியாவின் அரசியல் அடிப்படைகளான சோஷலிசம், மனித உரிமை, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் போன்ற சுதந்திர முற்போக்குச் சிந்தனைகள் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது இன்றைய உண்மை நிலையாகும்.

ஐரோப்பிய யூனியனில் செயல்பட்டுவரும் ஒற்றைச் சந்தைப் பொருளாதாரம், கண்டம் முழுமைக்குமான ஒரு எல்லைப் பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் ஐரோப்பியர் அல்லாதோரின் குடியேற்றம் போன்றவைகளால் உருவாக்கப்படும் சந்தர்ப்பங்களும் சவால்களுமே இன்றைய ஐரோப்பிய யூனியனின் அரசியலை நிர்ணயிக்கிறது எனக் கூற முடியும். ஐரோப்பிய முற்போக்கு, சமத்துவ, மறுமலர்ச்சித் தத்துவங்கள் அங்குள்ள ‘மண்ணின் மைந்தர்களான’ கிறிஸ்துவர்களின் / வெள்ளை இனத்தினரின் அரசியல் சமூக வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. அதே ஐரோப்பா, இன்று உலகத்தில் உள்ள பல இனத்தினருக்கும் – குறிப்பாக முஸ்லிம்களுக்கும் (44 லட்சம் அல்லது 6 சதவிகிதம்) – வீடென்பதால், ஐரோப்பிய சிந்தனைகள் தங்கள் அடையாளங்களைக் காக்கும் விவாதத்திலும் ஈடுபட்டுள்ளன. இந்த அடையாளங்களில் அறிவியல், பகுத்தறிவு, கல்வி, அரசியல் என்பதோடு நிறமும் மதமும் அடங்கும் என்பது முக்கியமானது.

உதாரணமாக, மதச்சார்பின்மையை – அரசியல் கருத்தியலை எடுத்துக் கொள்வோம். அவற்றின் அடிப்படை அளவுகோல் ஐரோப்பாவில் சர்ச்சில் இருந்தே ஆரம்பிக்கிறது. கிறிஸ்தவ தேவாலயத்தின் அதிகாரத்திலிருந்து அரசினை மீட்பதே ஐரோப்பிய மதச்சார்பின்மையின் ஆரம்பப்புள்ளி. இது மிக இயற்கையான ஆரம்பம். அதே சமயத்தில் பிரிட்டனின் பாராளுமன்றத்திலுள்ள பிரபுக்களின் சபையில் (House of Lords) சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் இருபத்தியாறு பிஷப்புகள் ஆன்மிக பிரபுக்களாக (Lords Sprituals) நியமனம் செய்யப்படுகிறார்கள். மக்களின் சபையில் (House of Commons) ஆளுங்கட்சியிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘செகண்ட் சர்ச் எஸ்டேட் கமிஷனராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பிரிட்டனின் சர்ச் ஆஃப் இங்கிலாந்து சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும், பாராளுமன்றத்தில் பதில் சொல்பவராகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்பவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவது மரபாகும். இவர் அரசுக்கும், சர்ச்சுக்கும் இடையே உள்ள முக்கிய நாடாளுமன்றத்தின் தரகு பிரதிநிதி. இந்தப் பழக்கம் பரவலாக மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது.

இது எவரையும் உறுத்துவது கிடையாது. இது கிட்டத்தட்ட ஐரோப்பிய மதச் சார்பின்மையின் ஒரு பண்பாகவும் கூறாகவுமே நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கிறிஸ்துவ மதச்சார்பின்மை (christian secularism), ஐரோப்பிய சமூகத்தில் பொதுப்புத்தியாக நிறுவப்பட்டுவிட்டது.

Mur Ali 1 - Murali Shanmugavelan

(வோர்சா பொதுசதுக்கம்)

இந்தியா போன்ற நாடுகளில் மதச்சார்பின்மை என்ற கருத்தியல் மதப் பொதுமையாக (religious neutrality) – பேச்சளவில் – அணுகப்படுகிறது. ஐரோப்பாவில் மதப்பொதுமை என்பது கடந்த 50 ஆண்டுகளாக பல்முகக் கலாச்சாரத் தன்மையே என (multiculturalism) மைய நீரோட்ட அரசியலில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை விளக்க, உதாரணமாக பொது வெளியில் ஆடை அணிவது என்ற பழக்கத்தைப் பார்க்கலாம்.

இக்கண்டத்தில் ஒருவர், தான் விரும்பியவண்ணம் உடை அணிவது சர்ச்சைக்குரிய பொருளே அல்ல. ஐரோப்பிய / மேற்குலக நவீன சமூகத்தில் விரும்பிய உடை அணிவது என்பது தனி மனித உரிமையாகும். இன்னும் சொல்லப்போனால் ஜெர்மனியிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உள்ள சில கடற்கரைகளில் மக்கள் நிர்வாணமாகக் குளித்துக் களித்திட உரிமை உண்டு. ஐரோப்பாவில் நீச்சல் குளத்தில், பொதுக் குளியலறைகளில் உள்ள உடை மாற்று அறைகளில் பொது நிர்வாணம் மிகச் சாதாரணம். அதே சமயத்தில் இஸ்லாமியப் பெண்கள் உடல், முகம் மறைக்க அணியும் புர்கா, நிக்காப் பற்றி பேசும்போது இந்த உடை அணியும் உரிமை – ஐரோப்பிய மனித உரிமைகளின் அடிப்படையில் – இரண்டுவிதமான எதிர்வினைக்கு உள்ளாக்கப்படுகிறது.

ஒன்று, ஐரோப்பியப் பெண்ணிய / சம உரிமைவாதிகள் முன்வைக்கின்ற உடலரசியல். இதன்மூலம் புர்கா, நிக்காப் போன்ற உடைகள் பெண்களின் சுதந்திரங்களை ஒடுக்கும், மனித உரிமையைப் பறிக்கும் மதக்குறியீடாகப் பார்க்கப்பட்டு, இந்த உடைகளைத் தடை செய்ய குரல் எழுப்பப்படுகிறது. இரண்டாவதாக, மாற்று மத அடையாளங்களைப் பொது வெளியில் காட்சிப்படுத்துவதன் மூலம் ஐரோப்பிய மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைகிறது என்ற அடிப்படையில் எழுப்பப்படுகின்ற சனநாயகவாதிகளின் குரல். இவர்களில் பெரும்பாலோனோர் கிறிஸ்துவ பழமைவாதிகள் ஆவர். தாராளவாதிகளோ (liberals), பன்முகக் கலாச்சாரத் தன்மையின் அடிப்படையில் ஆடை அணிவது தனிமனித உரிமையென வாதிடுகின்றனர்.

இந்த விவாதங்களின் சாதகப்பாதகங்களைப் பற்றி எழுத இன்னொரு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு இது இடமில்லை. ஆனால், இந்த ஆடை அரசியலில் உள்ள விவாதங்களில் எழுப்பப்படுகிற மதச்சார்பின்மையின் தர்க்கங்களில் ஐரோப்பிய கிறிஸ்துவத்தின் தாக்கங்கள் உள்ளன. இந்த தர்க்கங்களின் நீட்டிப்பாகவே முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது (lehya), அரசுப் பள்ளிகளில் பிரத்யேக ஹலால் செய்யப்பட்ட மதிய உணவு தயாரிப்பது, பொது இடங்களில் (உதாரணம்: விமான நிலையம்) தனிப் பிரார்த்தனைக் கூடங்கள் அமைப்பது எல்லாம் மதச்சார்பின்மை மற்றும் பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் – விமர்சனத்துடனோ, கரிசனத்துடனோ – பொது வெளியில் சூடான விவாதப் பொருளாக்கப்படுகின்றன.

உயிர்வாழ்தலின் முக்கியமான டார்வீனியக் கோட்பாடான புலம்பெயருதல், பின்னர் வரலாற்று நிகழ்வுகளான காலனியாதிக்கம் மற்றும் உலகமயமாக்கலின் காரணமாக ஐரோப்பியப் பெருநகரங்கள் இன்று பல்வேறு நிறக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் பல மதத்தினருக்கும் வீடாக உள்ளது. வெள்ளை ஐரோப்பாவின் சுதந்திர, முற்போக்கு, மறுமலர்ச்சிச் சிந்தனைகள், இந்தச் சூழ்நிலையில், மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது நிதர்சனமாகும். இந்தச் சூழ்நிலையில்தான், பிரிட்டன் என்ற ஐக்கிய ராஜ்ஜியம் (United Kindom) ஐரோப்பாவுடன் சேர்ந்திருக்க வேண்டுமா/டாமா என்ற பொது வாக்கெடுப்பு ஜுன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாளையும் விவாதிப்போம்…

கட்டுரையாளர் குறிப்பு – முரளி சண்முகவேலன், பிறந்த ஊர் மதுரை. நாடோடி. ஆப்பிரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் 15 வருடங்களுக்கும் மேலாக ஊர் சுற்றிய அனுபவமுண்டு. சாப்பாட்டுப் பிரியன். சமைப்பதில் ஆர்வம். இசை விரும்பி. சைக்கிள் ஓட்டி. வாசனைத் திரவியங்கள் சேகரிப்பவன். நாத்திகன். தொழில்நுட்பப் பிரியன். சாதி எதிர்ப்பாளன். கும்பகர்ணன்.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Mur Ali 1 - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு] https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *