இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெறுகிறது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
அதன்விளைவாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட 26 கட்சிகள் கூட்டணி அமைத்தன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டமானது ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார்.
இந்தியா கூட்டணி மூன்றாவது கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பு குழு, குறைந்த பட்ச செயல்திட்டம் வகுத்தல், லோகோ, தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் நடைபெறும் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைக்கின்றன.
இந்தியா கூட்டணி மூன்றாவது கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று உத்தவ் தாக்கரே பேசும்போது,
“எங்களுடைய கொள்கைகள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் எங்களுடைய இலக்கு என்பது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது தான்.
கடந்த 9 ஆண்டுகளாக பாஜகவில் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு ஒருவர் மட்டும் தான் உள்ளார்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு நிறைய பேர் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மீண்டும் போர் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது குண்டு வீச்சு!
மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு!
ஆசியக் கோப்பை: முதல் போட்டியில் பாகிஸ்தான் அபாரம்