சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் நிலமோசடியில் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தை, காவலில் எடுத்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் நிலமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், அவரது வீட்டில், நேற்று (ஜூலை 31) சோதனை நடத்திய அதிகாரிகள், ரூ.11.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் அமலாக்க துறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். இதன் முடிவில், அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 1) மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினரால் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதுதொடர்பாக சிறப்பு நீதிபதி தேஷ் பாண்டேவிடம், சஞ்சய் ராவத்தை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதன்படி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
ஜெ.பிரகாஷ்