தமிழ்நாட்டில்  4 கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்: அமித் ஷா

Published On:

| By Aara

நாட்டில் பதிவு செய்யப்பட்டு வரும் பன்மாநில கூட்டுறவு சங்கங்களின் (Multi State Cooperative Societies) எண்ணிக்கை, ஜூன் 30-ந் தேதி வரை 1508 இருப்பதாகவும்… இதில் 81 சங்கங்கள் செயல்படாமல் கலைக்கப்படும் நிலையில் உள்ளன என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக நிர்வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 அமித் ஷா மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 20) எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,  “தமிழகத்தை பொறுத்தவரை 123  பன் மாநில கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 சங்கங்கள் செயல்படாத நிலையில் இருப்பதால், கலைக்கப்படும் நிலையில் உள்ளன. புதுச்சேரியில் 5 சங்கங்கள் செயல்படுகின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 655 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, ஒவ்வொரு பன் மாநில கூட்டுறவு சங்கமும் ஒரு முக்கிய வணிக இடத்தைக் கொண்டிருக்க வேண்டும், அது சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமாக இருக்க வேண்டும். ஒரு சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி அதன் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel