திருச்சி சூர்யாவை பாஜகவில் இருந்து நீக்கியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்குலத்தோர் சங்கங்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல, பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், பாஜகவில் சாதி பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருச்சி சூர்யா நேற்று (ஜூன் 23) குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “தமிழக பாஜகவில் சாதி படிநிலைகள் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் பாயுமா? நாடார் என்பதால் தமிழிசை சவுந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா? அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் கவுண்டர் லாபியா?
பிராமணர் என்பதால் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை இல்லையா? சாதி லாபிகளுக்கு அடிபணிந்து பாஜகவின் Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது ” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக வழியில் பாஜகவும் புறக்கணிக்கிறது என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக வெவ்வேறு முக்குலோத்தோர் சங்கங்கள் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் சங்கங்கள் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது தமிழக பாஜக மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தை!
கல்வராயன் மலை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்: அமைச்சர் ராமச்சந்திரன்