செந்தில் பாலாஜியை இனி ED கஸ்டடி எடுக்க முடியாது: முகுல் ரோத்தகி

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 27) காலை தொடங்கி 7 மணி நேரம் நடைபெற்றது.

இன்று முற்பகல் அமலாக்கத் துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொளி வாயிலாக ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, “உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெறமறுத்து விட்டார்.

கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப் பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன” என்று அமலாக்கத் துறை சார்பில் வாதம் முன்வைத்தார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.

பின்னர் மதிய இடைவேளிக்கு பிறகு மீண்டும் நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி மற்றும் நிஷா பானு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை மீண்டும் வாதத்தை முன்வைத்தது. ‘கோவிந்தராஜ முதலியார்’ உள்ளிட்ட வழக்குகளின் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்டியது அமலாக்கத் துறை.

“கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை குற்றம் சாட்டப்பட்டவருக்கு “கூடிய விரைவில்” தெரிவிக்கலாம். உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றில்லை” என்று சட்டவிதிகளை நீதிபதிகள் முன் எடுத்து வைத்தார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. சாகன் சந்திரகாந்த் புஜ்பால், மது லிமாயி ஆகிய வழக்குகளின் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் வாசித்து வாதிட்டார்.

தொடர்ந்து அவர், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவரை கைது செய்ததற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க இரண்டு சாட்சிகள் உள்ளன. எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் பதிவுகள் உள்ளன.

அமலாக்கத் துறை துணை இயக்குநர் காயத்ரி தாசரி, செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கான காரணத்தை அவரிடம் தெரிவித்தார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மற்றும் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை எல்லாம் அமலாக்கத் துறை நீதிமன்றத்திடம் காட்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இறுதியாக இந்த ஆட்கொணார்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதத்தை நிறைவு செய்தார் துஷார் மேத்தா.

அமலாக்கத் துறை வாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி காணொளி வாயிலாக ஆஜராகி வாதாடினார்.

அவர், “ஜூன் 14ஆம் தேதி காலை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட போது ரிமாண்ட் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

செந்தில் பாலாஜியை காவலில் வைக்க அமலாக்கத் துறை ஜூன் 14ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது அமலாக்கத் துறை நீதிமன்ற காவலை கேட்டதே தவிர போலீஸ் காவலை அல்ல” என்று வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ரோத்தகி புதிய பாய்ண்டுகளை எடுத்து வைக்கிறார். அவருக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து வாதாடிய முகுல் ரோத்தகி, “அமலாக்கத் துறைக்கு நீதிமன்ற காவலை கோர உரிமை இருக்கிறது. ஆனால் போலீஸ் காவலை கோர உரிமை இருக்கிறதா? அமலாக்கத் துறை அதிகாரிகளை போலீஸ் அதிகாரிகளாக பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாலும் நீதிமன்ற காவலில் தொடர்ந்து இருப்பார் என ஜூன் 15ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்று போலீஸ் காவலை கேட்டது அமலாக்கத் துறை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை காவல் காலமாக கருதக்கூடாது என அமலாக்கத்துறை கோர முடியாது.

நிலநடுக்கம் வந்தாலும் சரி, தொற்றுநோய் ஏற்பட்டாலும் சரி கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. நாளையுடன் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் முடிவடைகிறது. முடிந்தது முடிந்தது தான். இந்த 15 நாளை நீட்டிக்க முடியாது. அமலாக்கத் துறை ஒரு நபரை கைது செய்தது முதல் கடிகாரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதை நிறுத்தி வைக்க முடியாது. கைதான 15 நாட்களுக்குள் மட்டுமே போலீஸ் காவலில் எடுக்க முடியும். எனவே இனி அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியாது.

செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் அமலாக்கத் துறை சந்தித்த சிரமங்களை, கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு கருத்தில் கொள்ள முடியாது. செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணையை தொடரலாம். ஆனால் இங்கு தடுத்து நிறுத்தப்படுவது என்னவென்றால் காவல் விசாரணை மட்டுமே” என்று குறிப்பிட்டார் முகுல் ரோத்தகி.

மேலும் அவர், “மருத்துவமனையில் அனுமதிக்க சரியான காரணம் இல்லை என்று அமலாக்கத் துறை கூறுகிறது. ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

“நான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது மற்றும் என்னைக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய நான் தகுதியானவன்” என்று வாதாடிய முகுல் ரோத்தகி, தன் கை கடிகாகரத்தைப் பார்த்துக் கொண்டே, ‘மாலை 4:45 மணிக்கு நீதிமன்ற நேரம் முடிந்தது என மணி அடித்ததால் நாளை வாதாட முடியுமா?’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதி நிஷா பானு, தொடர்ந்து வாதிடுமாறு அனுமதி வழங்கினார்.

தொடர்ந்து நீதிபதிகள் முன் வாதங்களை எடுத்து வைத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்ததாக அமலாக்கத் துறை கூறுகிறது. இது ஏற்கும்படியாக இல்லை. ஏனென்றால் ஜூலை 13ஆம் தேதி இரவு 11 மணிக்கே அமலாக்கத் துறை சோதனையை நிறைவு செய்திருக்கிறது” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய ;நவ்லகா’ வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய முகுல் ரோத்தகி, ரிமாண்ட் உத்தரவு சட்ட விரோதமானது என்றால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்று உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாக காட்டுகிறது. பிஎம்எல்ஏ பிரிவு 19ஐ மீறியும், சிஆர்பிசி 41ஏ-வை மீறியும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்று கூடிய சீக்கிரம் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதாக அமலாக்கத் துறை கூறுகிறது. அவர் கைது செய்த போதே எதன் அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் என்று தெரிந்திருந்தும், 11 மணி நேரத்துக்கு பிறகு சொல்வது தான் கூடிய சிக்கீரமா?” என கேள்வி எழுப்பினார் முகுல் ரோத்தகி.

அப்போது துஷார் மேத்தா, “நாங்கள் கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தோம். அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்” என்றார்.

மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிக்கிட்டு பேசிய போது, நீங்கள் வாதாடும் போது நான் குறுக்கிடவில்லை. நான் வாதாடும் போது குறுக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் முகுல் ரோத்தகி.

இதற்கு துஷார் மேத்தா, “ஒருவேளை நீங்கள் தலையிட்டிருந்தால் உண்மைகளில் தெளிவாக இருந்திருப்பீர்கள்” என்றார்.

இதற்கு முகுல் ரோத்தகி, “நான் இதுபோன்று தொடர்ந்து குறுக்கிட்டால் இந்த வழக்கை நாம் முடிக்க முடியாது” என்று கூறினார். தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றியும் நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று வாதத்தை முன்வைத்தார்.

இந்த வழக்கு இன்று காலை தொடங்கி தொடர்ந்து 7 மணி நேரம் நடைபெற்ற நிலையில், நாளை எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

பிரியா

திமுக எம்.பி ஞானதிரவியம் முன்ஜாமின் கோரி மனு!

மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்: அமெரிக்கா கண்டனம்!

mugul rotagi argument in senthil balaji case
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *