முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைசூருக்கு அருகே கேசரே என்ற கிராமத்தில் 3.16 ஏக்கா் நிலத்தை முதல்வா் சித்தராமையாவின் மனைவியும், தனது தங்கையுமான பி.எம்.பாா்வதிக்கு பி.எம்.மல்லிகாா்ஜுனசாமி 2010-ஆம் ஆண்டு பரிசாக கொடுத்தார்.
இந்த நிலத்தைக் கையகப்படுத்திய மைசூரு நகர வளா்ச்சி ஆணையம்(முடா), அங்கு வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்தது.
இந்த நிலத்திற்கு பதிலாக 2021 ஆம் ஆண்டு சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூர் நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியது.
இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கோரியும் கர்நாடகா ஆளுநரிடம் எஸ்.பி.பிரதீப்குமாா், டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் தாவா்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கினார்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், சித்தராமையா மீது எஸ்.பி.பிரதீப்குமாா், டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இதை எதிர்த்து சித்தாராமையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், சித்தராமையாவுக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநா் அளித்திருந்த அனுமதியை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பயனாளிகள் முதல்வர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விசாரணை தேவைப்படுகிறது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து முதல்வர் சித்தரமையா பதவி விலக வேண்டும் என்று மைசூரு, ஹுப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சித்தராமையா மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 25) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
கர்நாடகா உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவால் கர்நாடக முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சித்தராமையா கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்வார் என்று கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
ஜம்மு காஷ்மீர் இரண்டாம் கட்ட வாக்குபதிவு : 1 மணி நிலவரம் என்ன?
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!