சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) இளைஞர் அணி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே இன்று (நவம்பர் 11) ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 65வது நாளை எட்டியுள்ளது.
ஐந்து மாநிலங்களைக் கடந்து ஆறாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ராகுலின் நடைப்பயணம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள கலம்நூரியில் இன்று நடைபெற்ற நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, “இது ஜனநாயகத்திற்கானது, நாட்டிற்கானது. இது ஜனநாயகத்திற்கான யோசனை. துடிப்பான ஜனநாயகம் என்பது இதுதான்” என்று கூறியுள்ளார்.
இந்த நடைப்பயணத்தில் மாநில சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே, முன்னாள் எம்.எல்.ஏ சச்சின் அஹிர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்வதற்கு உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் கடந்த காலத்தில் பாஜகவுடன் தோழமை பாராட்டிய சிவசேனா, அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பாஜகவை விட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடர்வதில் தற்போது முனைப்பு காட்டி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்