மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முக்கிய உதவிகளை வழங்கிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9) கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அண்மையில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4,800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.
இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ளோம்.
இந்நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றியமைத்திட வேண்டும்.
காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்திட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சேதமடைந்த சான்றிதழ்: சிறப்பு முகாம் எப்போது?
வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!