வரும் காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலேயே புதிய நாடாளுமன்றம் கட்டுவது காலத்தின் அவசியமாகிவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி இன்று (மே 28)காலை திறந்து வைத்தார்.
முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதினங்களின் ஆசியுடன், நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை நிலைநிறுத்தினார் பிரதமர் மோடி.

பின்னர் 12 மணியளவில் புதிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் நினைவாக தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தையும் வெளியிட்டார். அப்போது அவையில் இருந்தவர்கள் மோடி மோடி என உற்சாக குரல் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து அவையில் இருந்த எம்.பிக்கள் முன்னிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பிரதமர் மோடிஉரையாற்றினார்.
அவர் பேசியதாவது, “வரலாற்றில் இன்றைய நாள் முக்கிய நாளாக இடம்பெறும். புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம். புதிய தேசத்தின் அடையாளமாக இந்த புதிய நாடாளுமன்றம் இருக்கும்.
பல ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி நமது பெருமையை நம்மிடமிருந்து பறித்தது. இன்று, அந்த காலனித்துவ மனநிலையை இந்தியா விட்டுச் சென்றுவிட்டது.
வரும் காலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் தான் புதிய நாடாளுமன்றம் காலத்தின் அவசியமாகிவிட்டது.
கிராமப்புற பஞ்சாயத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை நமது நாடு மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சியே முக்கிய நோக்கம். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதை நினைக்கும் போது அது அளவற்ற திருப்தியைத் தருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று பிரதமர் மோடி பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.