ஜாபர் சாதிக்… திமுக எச்சரிக்கை!

Published On:

| By christopher

DMK mp Wilson warning

இனி ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று திமுக எம்.பி. வில்சன் எச்சரித்துள்ளார்.

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று (மார்ச் 9) கைது செய்தனர்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங், “ஜாபர் சாதிக் தொடர்புடைய அரசியல் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக அரசை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று (மார்ச் 10) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக எம்.பி. வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்!

அப்போது திமுக எம்.பி. வில்சன் பேசுகையில், “ஜாபர் சாதிக் போதை வழக்கில் திமுகவையும், திமுக தலைவர்களையும் சிலர் தேவையின்றி இணைத்து பேசி வருகிறார்கள்.

இந்த வழக்கு மிக ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விசாரணை குறித்து செய்தியாளர்களை சந்தித்து, அதுவும் தேர்தல் நேரத்தில் என்.சி.பி துணை இயக்குநர் பேசியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தி பரப்பப்படுகிறது.

இனி ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்.

திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஒவ்வொருவரின் பின்புலத்தையும் ஆராய முடியாது. அதேநேரத்தில் அவர்கள் குறித்து குற்றச்செய்திகள் வந்தால் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு அனுமதி வாங்கியது திமுக அரசு தான்” என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

ஜாபர் சாதிக்கிற்காக வாதாடிய பாஜக வக்கீல்!

முன்னதாக அமைச்சர் ரகுபதி பேசுகையில், “என்சிபி விசாரணை அமைப்பின் துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். புலன் விசாரணை முழுமையாக நிறைவடையவில்லை, ஆனால், அதற்கு முன்பாகவே திமுகவை கொச்சைப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதன்மூலமாக ஏதேனும் அரசியல் ஆதாயம் பெறலாமா என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்.

2013-ஆம் ஆண்டு அவர் மீது ஒரு வழக்கு இருந்தது. அதிமுக அந்த வழக்கை முறையாக நடத்தவில்லை. ஜாபர் சாதிக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர் பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் பால் கனகராஜ்.  அதிமுக தான் ஜாபர் சாதிக்கை காப்பாற்றியது” என்று குற்றஞ்சாட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாபர் சாதிக் கைது.. என்சிபி-ஐ வைத்து திமுகவை மிரட்டுகிறது பாஜக: ரகுபதி குற்றச்சாட்டு!

போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை: ஆளுநரிடம் எடப்பாடி மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share