நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று (ஜூலை 26) திமுகவைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 19 எம்பிக்கள் இந்த வாரம் முழுதும் அவைக்குள் வரக் கூடாது என சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் நாடாளுமன்ற வளாகமே போராட்டமயமானது.
கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பம் முதலே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் ஆரம்பம் முதலே அமளியின் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 26) வழக்கம் போல் மாநிலங்களவை கூடிய நிலையில், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சபாநாயகர், இந்த அவை நடைபெற வேண்டும். அனைவரும் அவரவர் இருக்கைக்கு திரும்புங்கள்.. அவை குறித்த சட்டத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்தார். ஆனாலும் மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு, கல்யாண சுந்தரம் உள்பட 19 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எம்பி தயாநிதி மாறன், “எம்பிக்கள் 19 பேரை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயலும் நிகழ்வாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற்று அவர்களை மீண்டும் ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருச்சி சிவா எம்பி. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அவையில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கினார்.
”அனைத்து எதிர்கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டோம். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்கட்சிகளின் எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படுவதில்லை. பொதுவாக கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சி எம்பிக்களுடன் அரசாங்கத்தின் சார்பில் பேசுவார்கள். ஆனால் அதை வெறும் சடங்காக்கி விட்டார்கள்.

நாங்கள் ஆரம்பத்திலேயே. ’மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகள் நாடாளுமன்றத்தில் பேசப்படுகிறது என்ற எண்ணமாவது அவர்களுக்கு ஏற்பட வேண்டும்’ என தெரிவித்தோம். அரசுத் தரப்பில் அதை கேட்டுக் கொண்டார்கள் ஒன்றும் செய்யவில்லை.
அலுவல் ஆய்வுக்குழுவில் பேசினோம். அவர்களும் ஒன்றும் செய்யவில்லை. தொடர்ந்து நாங்களும் அவை விதிகளின்படி அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்து விட்டு இதை பேச வேண்டும் என தினம்தோறும் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து கொண்டு இருந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்காமல் அரசாங்கத்தின் மசோதாக்களை நிறைவேற்ற முயன்றார்கள். இந்த நிலையில் வேறு வழியில்லாமல் அனுமதிக்கப்பட்ட வழியில் எதிர்ப்பு குரலை எதிர்கட்சியினர் பதிவு செய்தனர். இது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் அரசாங்கம் பிரச்சனையின் தீவிரத்தை உணரவில்லை. அதன் உச்சகட்டமாக தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 19 எம்பிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இது முற்றிலுமாக ஜனநாயகத்திற்கு எதிரானது.
எதிர்ப்பு குரலை ஒடுக்குவதும், உணர்ச்சிபூர்வமான உரிமைக்குரலை ஒடுக்குவதுமாக இந்த அரசாங்கம் ஈடுபடுவது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இதுவரை அப்படி நடந்ததும் அல்ல “ என தெரிவித்த திருச்சி சிவா தொடர்ந்து….
”எம்பிக்களை அப்புறப்படுத்த காவலர்களை கொண்டு முயற்சி செய்தார்கள். அவர்களும் வெளியே செல்ல மறுத்தார்கள். நாங்களும் அதற்கு அனுமதிக்கவில்லை. இன்று அவை முடிந்திருக்கிறது நாளை அவை தொடங்கும் போது 19 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.
அதற்கு பின்னால், நாங்கள் கொண்டு வந்த பிரச்சினைகளைப் பற்றி பேசியபிறகு தான் வேறு எந்த அலுவலாக இருந்தாலும் பேச வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் உறுதியாக இருக்கிறோம். பாஜக அரசு தங்களது அடக்குமுறையை தொடரட்டும், தங்களது பலத்தை காட்டட்டும். நாங்களும் எங்களது உறுதியை தொடர்ந்து காட்டுவோம்” என ஆவேசமாக தெரிவித்தார் திருச்சி சிவா எம்பி.
- க.சீனிவாசன்