மகனுக்கு எம்.பி சீட்… நவாஸ் கனியை ஓரங்கட்டும் கண்ணப்பன்: ராமநாதபுரம் ரகளை பின்னணி!

அரசியல்

கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், திமுக கூட்டணியின் முஸ்லிம் லீக்  எம்பி ஆன நவாஸ் கனிக்கும் இடையில் நேற்று ஜூன் 17ஆம் தேதி அரசு விழாவில் நடந்த மோதல்… பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டு இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போட்டிகளுக்கான பரிசு வழங்கும் விழா…  ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைச்சரான ராஜ கண்ணப்பன் மக்களவை எம்பி நவாஸ் கனி ஆகியோரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

நான் என்ன உன் வீட்டு ஆடு மாடு மேய்க்கிறவனா?

மதியம் மூன்று மணிக்கு விழா தொடக்கம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  2.50 மணிக்கே வந்துவிட்டார் எம்பி நவாஸ் கனி. ஆனால் அப்போதே விழா துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்பியோடு  அவரது உதவியாளர் விஜயராம் உள்ளிட்ட சிலர்தான் சென்றிருந்தனர்.

தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு முடித்து சிறப்பு விருந்தினர்களை அழைத்துக் கொண்டிருந்தனர்.  மேடையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அமர்ந்திருந்தார்.

அப்போது கலெக்டரை பார்த்த எம்பி நவாஸ் கனி, ‘ஏன் சார்… ஃபங்ஷன் மூணு மணிக்குதானே போட்டிருக்கீங்க.  ஏன் முன்கூட்டியே ஆரம்பிச்சீட்டிங்க? பாக்குறவங்க எம்பி லேட்டா வர்றாருனுதானே நினைப்பாங்க?’ என்று கேட்டிருக்கிறார்.

mp seat behind the ramanathapuram collision

அப்போது மேடையில் இருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், ‘யோவ் நவாஸ் கனி வாய்யா மேல வாய்யா. நான் தான்யா ஆரம்பிக்க சொன்னேன்’ என்று சொல்லி எம்பியை கூப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே டென்ஷனில் இருந்த நவாஸ் கனி அமைச்சரின் வார்த்தைகளைக் கேட்டு மேலும் கோபமாகி, ‘வாய்யா போய்யானு கூப்பிடுறே… நான் என்ன உன் வீட்டு ஆடு மாடு மேய்க்கிறவனா?’என்று ஆள் காட்டி விரலை உயர்த்தி அமைச்சரிடம் நேருக்கு நேராகக் கேட்டுவிட்டார். 

mp seat behind the ramanathapuram collision

எம்பியின் ஆக்ரோஷத்தைப் பார்த்ததும் அமைச்சரின் ஆதரவாளர்கள் கடும் கோபம் அடைந்து சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். இந்த நேரத்தில்தான்  சமாதானம் செய்யப் போனார் கலெக்டர் விஷ்ணு சந்திரன். அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் மீது எம்பி நவாஸ் கனியின்  உதவியாளர்  விஜயராமு கையை வைத்துத் தள்ள திடீரென பேலன்ஸ் இழந்த கலெக்டர் கீழே விழுந்துவிட்டார். இது தொடர்பான கலெக்டர் கொடுத்த புகாரில் விஜயராமு இன்று கைது செய்யப்பட்டு விட்டார்.

இந்த அரசு விழா மோதலை மையமாக வைத்து… அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் எம்பி நவாஸ் கனிக்கும் இடையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த பனிப்போர் பகிரங்கமாக வெடித்திருக்கிறது.

mp seat behind the ramanathapuram collision

மாசெ – எம்பி கூட்டணியின் வினை

இது குறித்து ராமநாதபுரம் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம். முதலில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவாளர்களிடம் பேசினோம்.

“2019 இல் இருந்து எம்பி ஆக இருக்கிறார் நவாஸ் கனி.  மாவட்ட அமைச்சர் என்ற முறையில் ராஜ கண்ணப்பனுக்கு உரிய மரியாதை அளிப்பதையும் தவிர்த்து வருகிறார் எம்பி.  அது மட்டுமல்ல அமைச்சர் கண்ணப்பனுக்கும் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கும் இடையே சமூக உறவு இல்லை. இதை பயன்படுத்தி மாவட்ட செயலாளரோடு இணைந்து  அமைச்சரை புறக்கணித்து வருகிறார் நவாஸ் கனி.

ஆனால் இதையெல்லாம் அமைச்சர் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. அரசு ஊழியரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக அமைச்சர் மீது ஏற்பட்ட சர்ச்சையை பெரிதுபடுத்தி அவரது துறை மாற்றப்பட்டதற்குப் பின்னால் மாசெ- எம்.பி கூட்டணி மேலும் உறுதியாகியிருக்கிறது. 

இந்த நிலையில் அந்த அரசு விழாவில் சாதாரணமாகத்தான் நவாஸ் கனியை ஒருமையில் அழைத்தார் அமைச்சர். அமைச்சருக்கு இப்போது 74 வயது ஆகிறது. எம்பி நவாஸ் கனிக்கு 44 வயது தான் ஆகிறது. இந்த உரிமையில் கூட அவர் அவ்வாறு எம்பியை அழைத்து இருக்கலாம். 

ஆனால் இதை பெரிதுபடுத்தி அரசு விழாவில் அமைச்சரை கைநீட்டி எதிர்த்து பேசி… சமாதானம் செய்ய வந்த கலெக்டரை தனது ஆதரவாளர் மூலம் தள்ளிவிட வைக்கும் அளவுக்கு திமுக கூட்டணி கட்சி எம்பி இருக்கிறார் என்றால் திமுகவுக்குள்ளேயே எம்பிக்கு சில பேரின் ஆதரவு இருக்கிறது. அவருக்கு உதவியாக திமுகவின் மாவட்ட செயலாளரே இருக்கிறார் என்பதையும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்” என்கிறார்கள்.

mp seat behind the ramanathapuram collision

மகனை வேட்பாளராக்க துடிக்கும் ராஜ கண்ணப்பன்

இது குறித்து நவாஸ் கனி தரப்பினரிடம் விசாரித்தபோது… “ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் நவாஸ் கனி.  தொகுதி பிரச்சனைகளை தன்னால் முடிந்த அளவு தீர்த்து வைத்து வருகிறார். எல்லா கோயில் கும்பாபிஷேகங்களுக்கும் நன்கொடை அளித்து ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார். எல்லா சமுதாயத்தினரிடமும் நற்பெயர் ஈட்டி வருகிறார். 

ஆனால் அமைச்சர் கண்ணப்பன் மீண்டும் நவாஸ் அணிக்கு எம்பி சீட்டு கிடைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.  சமீபத்தில் நடந்த சில திமுக கூட்டங்களில், ‘வரும் எபி தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளார்தான் போட்டியிடுவார்’ என்று கண்ணப்பனே பேசி அது லோக்கல் செய்தித் தாள்களிலும் வந்துள்ளது.

இதற்குப் பின்னணி என்னவென்றால் 2024 தேர்தலில் எம்பி வேட்பாளராக தனது மகன் திலீப் ராஜகண்ணப்பனை நிறுத்துவதற்கு தயாராகிறார் அமைச்சர்.   அதனால்தான் நவாஸ் கனிக்கு  எந்த நற்பெயரும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு அமைச்சர் தரப்பில் செயல்பட்டு வருகிறார்கள். 

அந்த அடிப்படையில்தான் இந்த அரசு விழாவில் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். எதேச்சையாக நடந்த சம்பவத்தை வைத்து கலெக்டரை தள்ளிவிட்டதாக பெரிதுபடுத்தி எம்பியின் உதவியாளரையும் கைது செய்திருப்பது அமைச்சரின் திட்டம்தான்.

அவரது ஒரே நோக்கம் வரும் எம்பி தேர்தலில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடக் கூடாது, தன் மகன் வேட்பாளராக வேண்டும் என்பதுதான்.  தனிப்பட்ட முறையில் வீட்டுக்குள் ஒருமையில் அழைத்தால் கூட  வயதில் பெரியவர் என்று ஒருவேளை சகித்துக் கொள்ளலாம். ஆனால் அரசு விழாவில் எம்பியை,  ஏக வசனத்தில் பேசுவதை எப்படி ஏற்க முடியும்?  ” என்கிறார்கள் நவாஸ் கனி ஆதரவாளர்கள்.

வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் சீட் கேட்டு நிற்கவேண்டும் என்பதில் நவாஸ் கனி தெளிவாக இருக்கிறார். அதேநேரம் தன் மகனை நிறுத்துவது அல்லது  நவாஸ் கனி அல்லாத வேறு ஒரு இஸ்லாமியரை நிறுத்துவது என்பதில் முனைப்பாக இருக்கிறார் அமைச்சர் கண்ணப்பன்.

இந்த ஒற்றை அஜெண்டாவின் பின்னால்தான் இந்த அரசு விழா சர்ச்சை பூதாகரமாகியிருக்கிறது. 

ஆரா

கலைஞர் கோட்டம் திறப்பு விழா: உடன்பிறப்புகளை அழைத்த ஸ்டாலின்

ஆதிபுருஷ் விமர்சனம்: வீடியோகேம் விளையாட்டான ராமாயணம்?

+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *