கடலூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் இன்று (பிப்ரவரி 16) நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காங்கிரஸ் கிராம நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடலூருக்கு வந்தார். MP rescued who stuck in an elevator
நிகழ்ச்சி அங்குள்ள தனியார் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் ஒரு மணியளவில் வந்த எம்.பியை மாவட்ட தலைவர் திலகர் வரவேற்றார்.
ஹோட்டலில் தரைத் தளத்தில் பார் இருந்ததால் அங்கிருந்து லிப்டில் ஏற முடியாது. அதனால் படிக்கட்டில் ஏறி முதல்தளத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த லிஃப்ட் வழியே மேலே இரண்டாம் மாடி செல்ல ஏறினார்கள்.
மொத்தம் 240 கிலோ எடை கொண்ட அந்த லிஃப்டில் 2 சிறுவர்கள் மற்றும் 3 பெரியவர்கள் மொத்தம் 5 பேர் தான் செல்ல முடியும் என குறிப்பிட்டிருந்தது.
ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்.பி. விஷ்ணு பிரசாத் உடன் மாவட்ட தலைவர் திலகர், நகர தலைவர் பல்ராமன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட 6 பேர் லிஃப்டில் ஏறியுள்ளனர்.
அப்போதே, ’லிஃப்ட் இவ்வளவு பேரை தாங்குமா?’ என எம்.பி சந்தேகமாக கேட்டுள்ளார். அதற்கு மாவட்ட தலைவர் திலகர், ”அதெல்லாம் தாங்கும், நாம் போகலாம்” என்று தெரிவித்துள்ளார்.
2வது தள பட்டனை அழுத்தியதும் கதவு மூடியது. லிஃப்ட் ஒரு இன்ச் கூட நகரவில்லை. கதவும் திறக்கவில்லை. மீண்டும் கதவை திறக்க பட்டனை அழுத்தினர். ஆனால் மூடிய கதவு திறக்கவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் பதற, ஆலப்பாக்கம் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாவுக்கு திலகர் போன் பண்ணி, “ஏம்ப்பா ராஜா… எங்க இருக்க” என கேட்க, தலைவரே இரண்டாவது மாடி லிஃப்ட் எதிரில் நிற்கிறோம்… நீங்க எங்க இருக்கீங்க” என்று பதில் கேள்வி எழுப்பினர்.
“நாங்க முதல் தளத்துல லிஃப்டுல மாட்டிக்கிட்டோம். லிஃப்ட் கதவும் திறக்கல.. உடனே கீழே இறங்கி வா” என பதற்றத்துடன் கூறியுள்ளார்.
கீழே வந்த ராஜாவும், கதவை திறக்க முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. திலகர் அறிவுறுத்தலின்படி அவர் உடனடியாக ஹோட்டல் மேனேஜ்மென்ட்டுக்கு தெரிவித்தார். அவர்களும் வந்து 10 நிமிடமாக லிப்ட் கதவை திறக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகாத நிலையில், வடலூர் போலீசாரையும், தீயணைப்பு துறையினரையும் தொடர்பு கொண்டு ‘எம்.பி லிஃப்டில் மாட்டிக்கொண்ட விவரத்தை கூறினர்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்த போலீசாரும், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய மூன்று கிளையில் இருந்து வந்த சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு படையினரும் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் எதுவும் பலனளிக்காத நிலையில், கதவை உடைத்து திறக்கும் முடிவுக்கு வந்தனர். இதனால் லிஃப்ட் உள்ளே இருந்தவர்களுடன், வெளியே காத்துக்கொண்டிருந்த நிர்வாகிகள் மத்தியிலும் பதற்றம் அதிகரித்தது.
ஏனெனில் உள்ளே இருந்த 6 பேருக்கும் சுகர், பிரஷர் மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளிட்டவை இருந்தது.
எனினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது என்பதை திலகருக்கு போன் மூலம் நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.
சுமார் ஒரு மணி நேர கடும் போராட்டத்திற்கு இடையே கடப்பாரை போன்ற கருவியை கொண்டு லிஃப்ட் கதவை உடைத்து எம்.பி. விஷ்ணு பிரசாத் உட்பட 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
உள்ளே வியர்வையுடன் ஒருவித பதற்றத்துடனும் இருந்தாலும், வெளியே சிரித்தபடியே எம்.பி வெளியே வந்தார். அப்போதுதான் அங்கிருந்த அனைவரும் பெருமூச்சு விட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் திலகரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
“உண்மையிலேயே லிஃப்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து போயிட்டோம். எங்களை ஆறுதல்படுத்த எம்.பி, ‘ஒன்னும் பிரச்சனையில்லை. நம்மள பத்திரமா மீட்டுருவாங்க’ என்று அடிக்கடி தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மீட்பு படையினர் முதலில் எம்.பியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து நான் வெளியே வந்ததும் மயங்கி விழுந்துட்டேன். உடனே அங்கு வந்த டாக்டர்கள் என சிகிச்சை கொடுத்தாங்க. அப்போது பிரஷர் டெஸ்ட் பண்ணி பாத்ததுல 157 காட்டுச்சி.. இருந்தாலும் சில மணி நேரத்தில் நார்மல் ஆகி அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்” என்கிறார் திலகர்.