மேற்குவங்க மாநிலத்தில் மஹா பஞ்சமி பண்டிகையையொட்டி நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில பெண் எம்.பி. நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, அம்மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தன்னுடைய கருத்துக்களை அச்சமின்றி அதிரடியாக தெரிவிக்கும் மொய்த்ரா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். அதன்மூலம் யாரையும் பாரபட்சமின்றி உடனே விமர்சித்துவிடுவார்.
இவருடைய ட்விட்டர் கணக்கை, 7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அதனால், இவர் பதிவிடும் கருத்துகள், வீடியோக்கள், படங்கள் என அனைத்தும் அடுத்த சில மணி நேரங்களிலேயே வைரலாகிவிடும்.

கடந்த பிப்ரவரி 3ம் தேதி இவர் பதிவிட்ட பதிவு ஒன்று நன்கு வைரலாகியதுடன், பாஜகவினரையே ஆட்டம் காணவைத்தது.
அப்போது அதில், ”மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீதான தீர்மானத்தின்போது பேச இருக்கிறேன். பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். வேண்டுமெனில், கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதுபோல், கடந்த ஜூலை மாதம் ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலையால் ’காளி’ பட போஸ்டர் சர்ச்சையானது. இந்த போஸ்டருக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போதுகூட துணிச்சலுடன் மஹுவா மொய்த்ரா, “உங்கள் தெய்வத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம். காளி தெய்வம் இறைச்சி உண்ணும், மது அருந்தும். காளியை வழிபடும் விதம் இடத்திற்கு இடம் மாறுபடும்“ எனப் பேசியிருந்தார்.
இப்படி, லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசியதற்காக, மொய்த்ராமீது வழக்குப்பதிவுகூடச் செய்யப்பட்டது. இதுதவிர, பாஜகவுக்கு எதிராகவும் அவர் பலவித கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட அவர், “ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுவித்து மாலை அணிவித்து லட்டு கொடுத்து கொண்டாடுவதற்கு அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
இப்படி அனைத்துக்கும் ட்விட்டரில் அதிரடியாகக் கருத்துகளைப் பதிவிட்டும் வரும் மொய்த்ரா, அவ்வப்போது தன்னுடைய பொழுதுபோக்கு படங்களைப் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுவார்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 19ம் தேதி கண்ணை கவரும் புடவையில் கட் ஷு மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து கால் பந்தாடும் விளையாடும் வீடியோவையும் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அசத்தியிருந்தார்.
இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா, நாடியா மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மஹா பஞ்சமி விழாவில் பங்கேற்று நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அங்குள்ளவர்கள் நடத்திய கிராமிய கலைநிகழ்ச்சியின்போது மொய்த்ரா, பங்கேற்று நடனமாடினார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “நாடியா மாவட்ட பஞ்சமி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியது இனிமையான தருணங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மூர்த்தி Vs உதயகுமார்: மதுரையை மையம் கொள்ளும் கல்யாண அரசியல்!