மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா முதலில் நாம் தமிழர் கட்சியில் தான் சேர வந்தார் என சீமான் கூறியதற்கு ஜோதிமணி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து அந்த தொகுதிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ஈரோடு மரப்பாலத்தில் நடைபெற்ற நாதக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“தம்பி திருமகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்கிறேன். முதலில் திருமகன் நம்ம கட்சியில் தான் சேர வந்தார். ஆனால் ஐயா (ஈவிகேஎஸ் இளங்கோவன்) என்ன சொன்னார் என தெரியவில்லை.
என்னிடம் வந்து திருமகன் பேசினார். சரிப்பா அங்கேயே இரு என்று சொல்லிவிட்டேன். அவர் இறந்ததில் எனக்கு மிகத் துயரம். ஐயாவிடம் துக்கம் விசாரித்தேன்.
ஒன்றரை ஆண்டு காலம் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் எதாவது மக்கள் பிரச்சினை குறித்து பேசியதை பார்த்திருக்கிறீர்களா. இல்லை… ஐயா வும் பேசமாட்டார்.
எனவே மக்களின் பிரச்சினையைத் துணிந்து பேசக் கூடிய ஒருவரை அனுப்ப வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்படவில்லை. உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் கட்சிதான். காங்கிரஸ் பாஜக கட்சிகள் எல்லாம் எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை ” என்று பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்.பி,ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து,சிறப்பாக மக்கள் பணியாற்றி, மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா பற்றி சீமான் இப்படிப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது.
சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா–