காலை உணவு திட்டம் எப்படி உதித்தது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

அரசியல்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது.

பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்களுக்கு தண்ணீராக இருப்பதை போன்ற கருணை வடிவான திட்டம் தான் காலை உணவு திட்டம்.

பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு உணவு உற்பத்தியில் உச்சத்தை அடைந்துள்ளோம்.

மறுபுறம் யாரும் பசியால் வாடிவிட கூடாது என்பதற்காக தான் பிஞ்சு குழந்தைகளுக்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

உணவு திட்டத்திற்கு வித்திட்டவர் அண்ணா!

மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கீழ் அண்ணாத்தோப்பு என்ற பகுதியில் அமைந்துள்ளது.

ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்று மக்கள் மன்றத்தில் கோரிக்கை வைத்தவர் பேரறிஞர் அண்ணா.

அவரது பிறந்தநாளில் இன்று இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

102 ஆண்டுகளுக்கு முன்னாள் செப்டம்பர் 16ம் நாள் நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவரான சர்.பி.டி தியாகராயர், சென்னை மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றினார்.

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இப்போது காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதால் அவர்களின் கற்றல் திறன்,மாணவர்கள் வருகை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காலை உணவு திட்டம் எங்கு உதித்தது?

வறுமையோ, சாதியோ ஒருவரின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் திமுக தொடங்கப்பட்டது.

அதனைத் தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கலைஞர் ஆகியோர் நினைத்தார்கள். அவர்கள் வழிவந்த நான், அதனை நிறைவேற்றும் இடத்திற்கு வந்து செயல்படுத்தி வருகிறேன்.

சென்னையில் அடிக்கடி அரசு பள்ளிகளுக்கு ஆய்வுக்காக செல்வதுண்டு. அப்படி செல்லும்போது, ஒரு மாணவியிடம் ஏன் சோர்வாக இருக்கிறாய்? காலையில் சாப்பிடவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அந்த பெண் காலையில் எப்போதும் எங்கள் வீட்டில் சாப்பிட்டதில்லை என்று கூறினார். இதை கேட்டதும் நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தப்போது, நிறைய மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் தான் வருகிறார்கள் என்று தெரிவித்தார்கள்.

அப்போது தான் காலை உணவு திட்டத்தை நாம் கண்டிப்பாக துவங்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். அதன்படி இன்று காலை உணவு திட்டத்தை நாம் துவக்கி இருக்கின்றோம்.

இதன்மூலம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசிச் சுமையை குறைப்பதே அரசின் நோக்கம்.

காலை உணவு திட்டம் படிப்படியாக நிறைவேற்றி முழுமையாக செயல்படுத்தப்படும். காலை உணவுத் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்.” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியாதான் ஹிந்தியா அல்ல : அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.