பல்கலைக்கழகங்களில் சாதி ஒடுக்குமுறை ஏன்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

அரசியல்

2018 முதல் 2023 வரை ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்கள் 4,810 பேரும், மத்திய பல்கலைக்கழகங்களில் 14,446 பேரும் இடைநிறுத்தம் செய்துள்ளார்கள் என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுப்பாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பட்டியலின மற்றும் பழங்குடிகள் மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை அவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இருப்பினும் உயர்கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் சாதி ஒடுக்குமுறையால் தங்களது உயிரை மாய்த்து கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. ரோகித் வெமுலா முதல் தர்ஷன் சோலாங்கி வரை இந்த தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் உள்ளது.

sc st and obc students dropped out of iits and iims

ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகள் அதிகம் கடைப்பிடிக்கப்படுவதாக அங்கு பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நேரடியாக அவர்களது சாதியை கேட்காமல் மாணவர்களுடைய கட் ஆஃப் மதிப்பெண், குடும்ப பெயர்களை கேட்டு அதன் மூலம் சாதியை கண்டுபிடித்து நவீன தீண்டாமையை கடைபிடிக்கின்றனர் என்றும் தங்களை ரிசர்வேஷன் மாணவர்கள் என்று கேலி பேசுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகள், அதனை தடுப்பதற்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்கள் தற்கொலை குறித்த கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார்.

sc st and obc students dropped out of iits and iims

அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுப்பாஸ் சர்க்கார் , “கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு எதிராக ஐஐடி கல்லூரிகளில் எந்த ஒரு சாதிய ஒடுக்குமுறைகளும் நடக்கவில்லை. மத்திய பல்கலைக்கழகங்களில் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்பட்டு வரவில்லை.

எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் தங்கள் புகாரை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் குறைதீர்ப்பு குழு, மாணவர் சமூக கழகம் ஆகியவை நியமிக்கப்பட்டு அதற்கான தொடர்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மத்தியில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை கடைபிடிக்க பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களுக்கு விதிமுறைகளை வழங்கி வருகிறது.

2018 முதல் 2023 வரை ஐஐடி கல்லூரிகளில் 6 எஸ்.சி மாணவர்களும், 1 எஸ்.டி மாணவரும் என 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2017 முதல் 2022 வரை மத்திய பல்கலைக்கழங்களில் படித்த 7 எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரிகள் மற்றும் காவல்துறை சார்பில் தனி விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மாணவர்களுக்கு படிப்பதில் ஏற்பட்ட மன அழுத்தம், குடும்ப சூழல், தனிப்பட்ட காரணங்கள், மனநல பிரச்சனைகள் போன்றவற்றால் தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்களின் இடைநிற்றல் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

sc st and obc students dropped out of iits and iims

அவரது கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுப்பாஸ் சர்க்கார், “2018 முதல் 2023 வரை ஐஐடி ஐஐஎம்-களில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்கள் 4,810 பேரும் மத்திய பல்கலைக்கழகங்களில் 14,446 பேரும் இடைநிறுத்தம் செய்துள்ளார்கள்.

மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்காக இடைநிறுத்தம் செய்துள்ளார்கள்.

பின்தங்கிய நிலையில் இருந்து வரும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வியை தொடர்வதற்கு உதவித்தொகை, ஐஐடியில் படிக்கும் எஸ்.சி எஸ்.டி மாணவர்களுக்கு டியூஷன் கட்டணத்திலிருந்து விலக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்தி வருகிறது” என்றுள்ளார்.

செல்வம்

நஷ்டத்தில் தமிழகப் போக்குவரத்து கழகங்கள்!

ஓபிஎஸ் மேல்முறையீடு: இன்று விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *