More accusations will come against me Seeman ntk

என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகள் வரும் – சீமான்

அரசியல்

விஜயலட்சுமி புகார் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 1) திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சீமான்,“யார் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனில், விளக்கம் சொல்லத் தேவையில்லை. கருத்துப் பெட்டகத்தின் சாவி நல்ல கேள்விதான். ஒரு நல்ல பதிலின் தாயே, நல்ல கேள்விதான் என்று கூறுவார்கள். எனவே, பத்திரிகையாளர்கள் நல்ல கேள்வியைத்தான் கேட்க வேண்டும்.

என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை நம்பியிருந்தால், இத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின்தொடர்வார்கள்? அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியைக்கூட தொட முடியாது. அது ஏன் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், இதுகுறித்து பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது? 11 ஆண்டுகளாகவா ஒரே குற்றச்சாட்டு.

எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஒரு கனவு இருக்கிறது. அதையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதேபோன்ற குற்றச்சாட்டு, எனக்கு முன்னாடி 5 பேர் மீது இருக்கிறது. எனவே, இனிமேல் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள். அவசியமான கேள்விகளை கேளுங்கள், அவசியமற்ற கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள். நான் உதிர்க்கும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. வருங்கால தலைமுறைகளை வழிநடத்தும் ஒரு தத்துவமாக, பொன்மொழியாக, புரட்சிகர பாதையாக இருக்க வேண்டும். நீங்கள் இதுபோல் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் அதையே செய்து கொண்டிருக்கிறார்.

திருப்பூரில் நேற்று கூடிய கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். எனவே, என்மீது இன்று ஒரு குற்றச்சாட்டு வரும், நாளை ஒரு குற்றச்சாட்டு வரும் ” என்றார்.

மேலும், “யார் புகார் அளித்தாலும், காவல்துறை விசாரணை நடத்தும் அது அவர்களது கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால், அதன்பிறகு நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அதுக்கு பயப்படுகிற ஆள் இல்லை நான்” என்றார் சீமான்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இந்தியா கூட்டணி: ஒருங்கிணைப்பாளர் குழுவில் ஸ்டாலின்

அனிதா நினைவு தினம்: உதயநிதி உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *