மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கும், எம்.பி.சு.வெங்கடேசனுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
மதுரையில் ஆளும் திமுக மற்றும் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோரை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன் பேரணி சென்றார்.
அதே நேரத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததோடு, கிடைக்காததை கிடைக்கும் என்று வாங்கி தருவோம் என கூறி வருபவர்களை தயவுகூர்ந்து நீங்கள் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று சூசகமாக கூறியிருந்தார்.
இந்தசூழலில் மதுரையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சு.வெங்கடேசன் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் அவர், மதுரை நகரைப் பொறுத்தவரை, கடந்த 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி 115 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100 மிமீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் எம்பி வெங்கடேசனின் கோரிக்கையை குறித்து இன்று (அக்டோபர் 30) மதுரையில் அமைச்சர் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மூர்த்தி, “அவர் கொடுக்கணும்ங்க… அவர்கிட்டையே கேளுங்க. எங்க பாதிப்பு… எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர்? 25 ஆயிரம் ரூபாய் எங்கெங்கு கொடுக்க வேண்டும் என்பதை எம்பியிடமே கேளுங்க… அவர் சொல்லும் பதிலை வைத்து அவர்கிட்டையே நிதியையும் கேளுங்க” என்று பதிலளித்தார்.
அமைச்சர் மூர்த்தியின் இந்த பதில், கூட்டணி கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் உடனான மோதல் போக்கை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கங்குவா பட எடிட்டர் திடீர் மரணம்… என்ன நடந்தது?
“ஒரே ஆண்டில் இரு தேர்தலில் வென்றவர் முத்துராமலிங்க தேவர்: பசும்பொன்னில் எடப்பாடி மரியாதை!