நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் இன்று காலை வரை ஓட்டுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றுள்ளது. எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் களத்தில் விசாரித்து தகவல்களை மின்னம்பலம் சார்பாக சேகரித்தோம். இந்த முறை பரவலாக பண மழை குறைவாக பொழிந்திருப்பதை முதற்கட்ட அப்டேட்டாக நேற்று வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று காலை வரை கிடைத்த தகவல்களை இப்போது தருகிறோம்.
திமுக கூட்டணி
முதலில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் பணம் எதுவும் கொடுக்கவில்லை. பாஜக அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை முடக்குவதாக குற்றச்சாட்டு இருப்பதால், பணப்புழக்கத்தை மையமாக வைத்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபடக் கூடும் என்று திமுக தலைமை இந்த தேர்தலை அதீத கவனத்துடன் எதிர்கொண்டது.
அதன் காரணமாக எங்கெங்கெல்லாம் வெற்றி பெறுவதற்கு கடுமையான போட்டி நிலவுவதாக திமுக கருதுகிறதோ அந்த தொகுதிகளில் மட்டுமே பணப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்று நம்பும் தொகுதிகளில் பணம் எதுவும் கொடுக்கவில்லை.
களத்திலிருந்து கிடைத்த தகவல்களின் படி, திமுக கூட்டணி சார்பில் எந்தெந்த தொகுதிகளில் பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்ற பட்டியலைப் பார்ப்போம்.
- தென்சென்னை,
- மத்திய சென்னை
- வடசென்னை
- திருவள்ளூர்
- ஸ்ரீபெரும்புதூர்
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- ஆரணி
- கள்ளக்குறிச்சி
- கிருஷ்ணகிரி
- நாமக்கல்
- திருப்பூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- மதுரை
- தென்காசி
- திருநெல்வேலி
ஆகிய 18 தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பாக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
மற்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 500 ரூபாய் வரை தொகுதிக்கு ஏற்றவாறு சப்ளை செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணி சார்பாக பரவலாக எல்லா தொகுதிகளிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு 200 ரூபாய், 250 ரூபாய், 300 ரூபாய் என்று தொகுதிக்கு ஏற்றவாறும், பகுதிகளுக்கு ஏற்றவாறும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் அதிமுக சார்பில் ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
பூத் செலவு மற்றும் இதர செலவுகளை வேட்பாளர்கள் பார்க்க வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு ஆகும் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக அதிமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்த போது சொல்கிறார்கள்.
பாஜக கூட்டணி
பாஜகவைப் பொறுத்தவரை கட்சி ரீதியாக முடிவெடுத்து மேலிடத்திலிருந்து எந்த தொகுதிக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தவிர மற்ற பாஜக வேட்பாளர்கள் பணம் எதுவும் ஓட்டுக்கு கொடுக்கவில்லை.
இது தவிர்த்து பொள்ளாச்சியில் பணம் கொடுக்க ஆரம்பித்து, அது பறக்கும் படையினரிடம் பிடிபட்டவுடன் அங்கும் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவையில் கூட கட்சி மேலிடத்திலிருந்து ஓட்டுக்கு பணம் வழங்கப்படவில்லை. கோவையின் சில பகுதிகளில் மட்டும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அவர்களின் ஆர்வத்தில் தங்கள் சொந்த செலவில் ஓட்டுக்கு பணம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் தர்மபுரி தொகுதியில் மட்டும் பாமக சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி செளமியா அன்புமணி அங்கு போட்டியிடுவதால் அவரை எப்படியாவது வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்பதற்காக ராமதாசின் மொத்த குடும்பமும், நான்கு எம்.எல்.ஏ-களும், 50 க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும் இடைதேர்தல் பாணியில் அங்கு வேலை செய்தனர். தர்மபுரி தொகுதியில் 70% வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 300 ரூபாய் பாமகவினரால் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடும் பெரம்பலூர் தொகுதியில் ஓட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடும் வேலூர் தொகுதியில் ஓட்டுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் இன் செயல்பாடு டிடிவி தினகரன் ஆதரவாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக ஓ.பன்னீர்செல்வம் அதிகமாக செலவு செய்ய மாட்டார், சிக்கனமான அரசியல்வாதி என்பதே அவரைப் பற்றிய பேச்சாக இருந்தது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த பல நிர்வாகிகள் அவரை விட்டு விலகியதற்கு அவர் செலவு செய்யாததே காரணம் என்றும் பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் முதல்வர் பதவி வரைக்கும் மேலே கொண்டுவந்தவர் டிடிவி தினகரன். அப்படிப்பட்ட டிடிவி தினகரன் தேனியில் செய்ததை விட கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ் கலக்கி விட்டார் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மூக்கில் விரல் வைத்துள்ளனர்.
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் பணத்தைப் பெரிதாக இறக்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அவருக்கு எதிராக தங்க தமிழ்செல்வன் போட்டியிடுவதால் திமுக அங்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஓட்டுக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் டிடிவி தினகரனைப் பொறுத்தவரை பணம் கொடுத்தாலும் அங்கு வெற்றி பெறும் சூழல் இல்லை என்பதால் அவர் பணம் கொடுக்கவில்லை என்று அமமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது சொல்கிறார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் கிட்டத்தட்ட 65% வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 500 ரூபாயை தனது நிர்வாகிகளை வைத்து கடைசி நேரத்தில் இறக்கி கலக்கி விட்டார் என்று தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் பற்றிய பேச்சே அதிகமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த தேர்தலில் மும்முனைப் போட்டியில் சில தொகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது பெரிய அளவிற்கு பண மழை பொழியவில்லை என்றே சொல்லலாம். இதனால் முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் மக்களை ஓட்டு போட வாங்க என்று அழைக்கும்போது, காசே கொடுக்காம எதுக்கு ஓட்டு கேட்க வர்றீங்க என்று மக்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பதை பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பணமழை பொழியாததால் வாக்கு சதவீதம் குறையுமா?
தமிழ்நாடு – மக்களவை தேர்தல் : மதியம் 1 மணி நிலவரம்!
ரஷ்யா டூ சென்னை… ஆரவாரம் செய்த ரசிகர்கள்: வாக்களித்தார் விஜய்
தமிழ்நாடு – மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்!